Published : 07 Feb 2024 06:12 AM
Last Updated : 07 Feb 2024 06:12 AM
சென்னை: சென்னையில் தெற்காசிய கல்வி மாநாடுநேற்று நடந்தது. இதில், வெளிநாடுகளில் உள்ள உயர் கல்வி வாய்ப்புகள் பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அமைச்சர் அன்பில்மகேஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தெற்கு ஆசிய நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் இருக்கும் உயர் கல்விக்கான வாய்ப்புகளை பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில், சென்னை கோட்டூபுரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தெற்காசிய கல்வி மாநாடு நேற்று நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னையில் உள்ள தைபே பொருளாதார மற்றும் கலாச்சார மையத்தின் இயக்குநர் ரிச்சர்ட் சென், கொரியா தூதரக மேலாளர் ஹீசன் ஷின், ஜப்பான் துணை தூதரக அதிகாரி தேரோகா மாமி, மலேசியா துணை தூதர் சரவணகுமார், தமிழ்நாடு மாதிரி பள்ளி உறுப்பினர் செயலர் சுதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், தமிழகம் முழுவதும் இருந்து வந்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில், அந்தந்த நாட்டில் உள்ள உயர் கல்வி வாய்ப்புகள் குறித்துஒவ்வொரு தலைப்புகளில், வெளிநாட்டு பிரதிநிதிகள் மாணவர்களிடம் எடுத்துரைத்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது:
மாணவர்களின் திறன்களையும், கல்வியையும் மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள பல்வேறு முயற்சிகள் `நான் முதல்வன் 'திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.
இதன் பயனாக, தைவான்நாட்டில் முழுமையான கல்வி உதவித் தொகையுடன் உயர் கல்வியை மேற்கொள்ள தமிழகத்தை சேர்ந்த 2 அரசு பள்ளி மாணவர்கள் தேர்வாகி உள்ளனர்.
ஒட்டுமொத்த இந்தியாவிலேயே 3 மாணவர்களில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது பெருமையாக இருக்கிறது. தெற்காசிய கல்வி மாநாட்டில் தைவான், மலேசியா, ஜப்பான், கொரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வந்துள்ளனர்.
7 மாதங்களுக்கு முன்பு அரசு பள்ளி மாணவர்களை இந்த நாடுகளுக்கு நான் அழைத்து சென்றேன். அப்போது, அந்த நாடுகளில் உள்ள உயர் கல்வி வாய்ப்புகள், கல்வி உதவித் தொகை குறித்து அவர்கள் கூறினார்கள்.
இதையடுத்து, தமிழகத்திலும் மாணவர்கள் அனைவரும் இதைத் தெரிந்து கொள்ளும் வகையில்தான் இந்த மாநாடு இங்கு நடத்தப்படுகிறது. அந்தந்த நாட்டில் உள்ள பாடப்பிரிவுகள், கல்வி வாய்ப்புகள், உதவி தொகை பற்றி மாணவர்கள் அறிய முடியும். இதுபோன்ற உயர் கல்வி வாய்ப்புகள் வெளிநாடுகளில் இருக்கின்றன என்பதை மற்றவர்களுக்கும் மாணவர்கள் எடுத்து செல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT