

சென்னை: அவுட்சோர்சிங் நடைமுறையை விடுத்து காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் நேற்று போராட்டம் நடத்தியது.
அவுட்சோர்சிங் நடைமுறையை கைவிட வேண்டும். அனைத்து நிலை காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். கிராம ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை தேர்வு நிலை ஊதியம், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, ஈட்டா விடுப்பு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் நேற்று சைதாப்பேட்டையில், ஊரகவளர்ச்சித் துறை இயக்குநர் அலுவலகம் அமைந்துள்ள பனகல் மாளிகை முன்பு போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரமேஷ் தலைமைதாங்கினார். தமிழ்நாடு வளர்ச்சி பணிஅலுவலர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் கென்னடி பூபாலராயன்போராட்டத்தை தொடங்கி வைத்தார். சங்கத்தின் பொதுச் செயலாளர் ச.பாரி, பொருளாளர் கே.பாஸ்கர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் எம்.சுப்பிரமணி ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.