Published : 07 Feb 2024 06:06 AM
Last Updated : 07 Feb 2024 06:06 AM
சென்னை: ஆம்னி பேருந்தின் டயர் சாலையில் கழன்று தனியாக ஓடி ஆட்டோ மீது மோதியதில் அதன் ஓட்டுநர் காயம் அடைந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தஞ்சாவூரிலிருந்து கோயம்பேடு நோக்கி ஆம்னி பேருந்துஒன்று சென்றது. இந்த பேருந்தை தஞ்சாவூரைச் சேர்ந்த ஜான் கென்னடி (57) என்பவர் ஓட்டினார்.
வடபழனி 100 அடி சாலை அம்பிகா எம்பயர் ஓட்டல் அருகே சென்றபோது, ஆம்னி பேருந்தில் பின்னால் உள்ள இடது பக்கஆக்சில் உடைந்து டயர் தனியாகக் கழன்று சாலையில் ஓடி, அங்கிருந்த ஆட்டோ மீது மோதியது.
சினிமா பாணியில் நடைபெற்ற, இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் வடபழனி பக்தவச்சலம் காலனி 1-வது தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் (52) என்பவரது இரு கால் முட்டிகளிலும் காயம் ஏற்பட்டது. மேலும், ஆட்டோவின் இடது பக்கம் முழுவதும் சேதமடைந்தது.
சாலை நடுவே ஆம்னி பேருந்து நின்றுவிட்டதால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார்சம்பவ இடம் விரைந்து காயம் அடைந்த ராஜேந்திரனை மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், சாலையில் நின்றபேருந்தை கிரேன் உதவியுடன் அகற்றினர்.
இந்த சம்பவத்தால் வடபழனி 100 அடி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT