ஊதிய பிடித்தம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த சார்பு ஆய்வாளரை அதிகாரிகள் மிரட்டி மனுவை வாபஸ் பெற வைப்பது துரதிருஷ்டவசமானது: உயர் நீதிமன்றம்

ஊதிய பிடித்தம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த சார்பு ஆய்வாளரை அதிகாரிகள் மிரட்டி மனுவை வாபஸ் பெற வைப்பது துரதிருஷ்டவசமானது: உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

சென்னை: ஊதிய பிடித்தம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த சார்பு ஆய்வாளரை அதிகாரிகள் மிரட்டிவாபஸ் பெற வைப்பது துரதிருஷ்டவசமானது என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதி, மனுதாரர் மீது நடவடிக்கை எடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீதுதாமாக முன்வந்து வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

சென்னை ஆவடி சிறப்பு காவல்படை பட்டாலியனில் சார்புஆய்வாளராக பணிபுரியும் எஸ்.ராஜா, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தமிழக காவல்துறையில் 2002-ம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் காவலராக பணியில் சேர்ந்தேன். 6-வதுஊதியக்குழு பரிந்துரையின் பேரில் எனக்கு கூடுதலாக ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறி, கூடுதலாக வழங்கப்பட்டுள்ள ரூ.56,363-ஐ பிடித்தம்செய்ய 13-வது பட்டாலியன் கமாண்டன்ட் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், என்னுடன் பணியில்சேர்ந்த பிரகாசம் என்ற போலீஸ்காரருக்கு அதே ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே, ஊதியத்தை பிடித்தம் செய்ய கமாண்டன்ட் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவேவிசாரித்த நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத், 2 பேருக்கு 2 விதமான ஊதியம் நிர்ணயித்தது எப்படி என்பதை கமாண்டன்ட் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜராகி, ‘‘வழக்கை வாபஸ் பெற வேண்டும் என மனுதாரரை அதிகாரிகள் மிரட்டியுள்ளனர்.

எனவே, வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும்’’ எனகோரிக்கை விடுத்தார். அப்போதுஆவடி சிறப்பு காவல் படைகமாண்டன்ட் அய்யாசாமியும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

அதையடுத்து நீதிபதி, ‘‘ஒரேநேரத்தில் பணியில் சேர்ந்த 2போலீஸ்காரர்களுக்கு எப்படிவெவ்வேறு ஊதியம் வழங்கப்படுகிறது. எதற்காக மனுதாரரின்ஊதியத்தை பிடித்தம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பதை விளக்கத்தான் கமாண்டன்ட் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அதற்காக வழக்கு தொடர்ந்தவரை மிரட்டிவழக்கை வாபஸ் பெற வைப்பதா? ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக வழக்கு தொடரஅவருக்கு உரிமை இல்லையா?2012 முதல் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. திடீரென இந்தவழக்கை வாபஸ் பெறுகிறேன் என மனுதாரர் தரப்பில் கூறினால்என்ன அர்த்தம்.

இது துரதிருஷ்டவசமானது’’ என கருத்து தெரிவித்தார். அப்போது கமாண்டன்ட் தரப்பில், யாரையும் மிரட்டவில்லை என பதில் அளிக்கப்பட்டது,

அதையேற்காத நீதிபதி, வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு இடையூறு செய்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்குதொடரப்படும் என எச்சரித்தார். மேலும், மனுதாரரும் தனக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் உயர் நீதிமன்றத்தை நாடலாம் என கூறிவழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in