Published : 07 Feb 2024 06:20 AM
Last Updated : 07 Feb 2024 06:20 AM
சென்னை: எம்ஆர்பி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,021 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். மேலும் 1,251 மருத்துவர்கள் இடங்களை நிரப்புவதற்கு ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,021 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 1,021 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மருத்துவர் கே.நாராயணசாமி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: நீதிமன்ற வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டு, 1,021 மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்குவதை சாதனையாக கருதுகிறேன். தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 1,021 மருத்துவர்களுக்கு காலியாக உள்ள 20 சுகாதார மாவட்டங்களுக்கு பொது கலந்தாய்வு நடத்தப்பட்டது.
பொது கலந்தாய்வு மூலமாக பணி நியமனம் நடந்துள்ளது. சிலருக்கு விரும்பிய இடம் கிடைத்திருந்தால் மகிழ்ச்சியாக பணியாற்றுங்கள். விரும்பாத இடம் கிடைத்திருந்தால் மிக, மிக மகிழ்ச்சியாக பணியாற்றுங்கள். ஓராண்டு காலம் மக்களுக்கு சேவையாற்றுங்கள். அதன்பின், பொது கலந்தாய்வில் விரும்பிய இடங்களில் பணியாற்றலாம்.
இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 2,905 மருத்துவப் பணியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கிறது. பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புமருந்துத்துறை இயக்குநரகத்தில் 1,251 மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு வாரம் காலத்துக்குள், அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பில் கரோனா காலங்களில் பணியாற்றியவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என்று குறிப்பிட்டு அறிவிப்பு வெளியிடப்படும்.
அதேபோல், 983 மருந்தாளுநர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புகள் முடிக்கப்பட்டு பணி நியமன ஆணை வழங்கும் நிலையில் உள்ளது.மருந்தாளுநர்களுக்கு கரோனா கால ஊக்க மதிப்பெண் வழங்கப்படாது. 1,266 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்கள் நிரப்புவதற்குநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2,271 கிராம சுகாதார செவிலியர்களை நிரப்புவதற்கான பணி நடைபெற்று வருகிறது. 350 ஆய்வக நுட்புநர்கள் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகள் விரைவில் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT