சென்னை | ஓடிக்கொண்டிருந்த மாநகர பேருந்தில் பலகை உடைந்து பெண் பயணி காயம்

சென்னை | ஓடிக்கொண்டிருந்த மாநகர பேருந்தில் பலகை உடைந்து பெண் பயணி காயம்
Updated on
1 min read

சென்னை: ஓடிக் கொண்டிருந்த மாநகர பேருந்தின்பலகை உடைந்ததில் கீழே விழுந்து பெண் பயணி காயமடைந்தார். சென்னை, வள்ளலார் நகரிலிருந்து 59 வழித்தட எண் கொண்ட பேருந்து திருவேற்காடு நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து அமைந்தகரையில் உள்ள வணிக வளாகம் அருகே வந்தபோது, பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஷானாஸ் என்ற பெண் பயணி, அடுத்த நிறுத்தத்தில் இறங்குவதற்காக எழுந்துள்ளார்.

அப்போது, திடீரென பேருந்தின் தளத்தில் உள்ள பலகை உடைந்தது. அதில் ஏற்பட்ட ஓட்டை வழியாக ஷானாஸ் விழுந்தார். அவர் ஜன்னல்கம்பியை இறுக்கமாக பற்றிக் கொண்டநிலையில், கால் பகுதி முழுவதும் பேருந்தின் கீழே அந்தரத்தில் தொங்கசிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்ட ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். அதிர்ச்சியடைந்த பயணிகள் ஓட்டைக்குள் சிக்கியவரை உடனடியாக மீட்டு ஆசுவாசப்படுத்தினர். லேசான காயம் ஏற்பட்ட அந்த பயணிக்கு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆத்திரமடைந்த பயணிகள் பலகை சேதமடைந்ததை கவனிக்காமல் ஏன்பேருந்தை எடுத்து வந்தீர்கள் என மாநகர பேருந்து ஓட்டுநர், நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதேநேரம், சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்காமல் பேருந்தை ஊழியர்கள் அங்கிருந்து ஓட்டிச் சென்றதால் அமைந்தகரை போலீஸார் அதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓடும் பேருந்தில் ஓட்டை விழுந்த இச்சம்பவம் குறித்து விசாரித்து உரியநடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,சம்பந்தப்பட்ட பேருந்தின் பணிமனைமேலாளர், தொழில்நுட்ப பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகர போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தொழிற்சங்கத்தினர் கூறும்போது, ``நேற்று முன்தினம் இரவு தூய்மைப் பணி மேற்கொண்ட அந்த ஊழியர்களுக்கு இந்தபஸ்ஸில் உள்ள குறைபாடு தெரியவந்திருக்கும். எனவே, அலட்சியமாக இருந்த ஒப்பந்த நிறுவனத்திடமும் விசாரணை மேற்கொள்ள வேண்டும். பழைய பேருந்துகளை கழித்து விரைவில் புதிய பேருந்துகளை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்'' என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in