

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் 2022 டிசம்பரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, தேசிய பட்டியலின ஆணையத்தின் தமிழக இயக்குநர் எஸ்.ரவிவர்மன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: வேங்கை வயல் விவகாரம் தொடர்பான வழக்கின் போக்கு திசை மாறியுள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றனர். ஒரு குவளை தண்ணீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டிருந்தால் டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்துவது எளிது. ஆனால், 10 ஆயிரம் லிட்டர் தண்ணீரைக் கொண்ட மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து சேகரிக்கப் பட்ட மாதிரியானது, டிஎன்ஏ சோதனைக்கு உகந்தது அல்ல. எனவே, உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்துவது சரியான நடவடிக்கையாக இருக்கும்.
அதே சமயம், பட்டியலின மக்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தக் கூடாது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பட்டியலின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஆணையத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ளும் தமிழக போலீஸாரை குற்றம் சுமத்த முடியாது. வாக்கு வங்கி அரசியலின் தலையீடு இருக்கும் என்றும் கூற முடியாது. இது போன்ற தீண்டாமை சம்பவம் நடைபெறாமல் இருக்க சட்டத்தின் மூலமாக ஓரளவு தான் நடவடிக்கைகளை எடுக்கலாம். மக்களிடையே மனதளவில் மாற்றம் ஏற்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.