

வண்டலூர்: வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரும் 11 ஆண்டுகால கோரிக்கை மீது அரசு தனி கவனம் செலுத்தவும், முதல்வர் இதில் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, 1,490 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த பூங்காவில், 170 வகைகளை சேர்ந்த, 1,977 வனவிலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகின்றன. தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பூங்காவுக்கு பார்வையாளர்களாக வந்து செல்கின்றனர்.
பூங்காவில், 75 நிரந்தரப் பணியாளர்களும், 219 ஒப்பந்தப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்தப் பணியாளர்களுக்கு மாதத்துக்கு, 26 நாட்கள் பணி வழங்கப்பட்டு, தினசரி அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. எந்தவித குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாமல், 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படுவது நாடு முழுவதும் வழக்கமாக உள்ளது.
அதன்படி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்களில், 10 ஆண்டுகள் முதல், 15 ஆண்டுகள் வரை பணியாற்றியவர்களுக்கு பணிநிரந்தம் வழங்கப்பட வேண்டும். ஆனால் அவர்களுக்கு தமிழக அரசு பணிநிரந்தரம் வழங்க மறுத்திருப்பது மட்டுமின்றி, இனி எந்தக் காலத்திலும் அவர்கள் பணிநிரந்தரம் அல்லது பணிப் பாதுகாப்பு கோர முடியாத அளவுக்கு அவர்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. வண்டலூர் பூங்கா அடிப்படை பணியாளர் சங்கம், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம், உழைப்போர் உரிமை இயக்க சங்கம் ஆகிய 3 சங்கங்கள் தொடர்ந்து தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டுமென போராடி வருகின்றன.
உழைப்போர் உரிமை இயக்க சங்கத்தின் மாநில செயலாளர் எ.கோபால் கூறியது: வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பெண்கள் உட்பட, 192 பேர் தினக்கூலி பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். மேலும், 50-க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பூங்காவில், விலங்கு காப்பாளர், கழிவறை பராமரிப்பாளர், பூங்கா பராமரிப்பாளர், இரவு காவலர்கள் உட்பட, பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றனர்.
16 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தினக்கூலி பணியாளர்கள், தங்களை ௮ரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், 192 தினக்கூலி தொழிலாளர்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி முடித்த 46 பேரை 2019-ம் ஆண்டு முதல் பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு பூங்கா நிர்வாகம் கருத்துரு அனுப்பியது.
ஆனால் அரசு இதனை ஏற்கவில்லை. இதனிடையே தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும், 2023-ம் ஆண்டு, 86 பேர் அடங்கிய பட்டியலை பூங்கா நிர்வாகம் கருத்துருவாக அனுப்பியது. மீண்டும் அரசு ஏற்கவில்லை. பூங்கா நிர்வாகம் அரசுக்கு கருத்துரு அனுப்பியும் அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
இது தொழிலாளர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தொழிலாளர்களின் நலன் கருதி ௮வர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு முன்வர வேண்டும். தமிழக முதல்வர் இதில் தனி கவனம் செலுத்தி மக்களவை தேர்தலுக்கு முன் இதனை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக அரசு சார்பில் பூங்கா ஊழியர்களின் சம்பள விவரம் கேட்கப்படுகிறது. ஆனால், இந்த விவரம் பூங்கா நிர்வாகத்திடம் இல்லை. காரணம் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் இவர்கள் பணிபுரிவதால் சம்பள விவர தகவல்கள் இல்லை. கடைசியாக, 1991-ம் ஆண்டு, 72 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.
அதேபோல், 1995-ம் ஆண்டு 52 பேர், 1999-ம் ஆண்டு 44 பேர், 2007-ல் 23 பேர், 2010-ல் 20 பேர்,2013-ல் 14 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். அதன்பின், 11ஆண்டுகள் கடந்தும் இதுவரை யாரும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. அரசு ஊழியராக இருந்தால் சம்பள உயர்வு கிடைக்கும். அரசின் சலுகைகள் அனைத்தும் கிடைக்கும். ஒப்பந்த ஊழியராக இருந்தால் சம்பளம் மட்டும்தான் கிடைக்கும்.
அதுவும் தினம் ரூ.439 கிடைக்கும். பணிக்கு வரவில்லை எனில் அதுவும் இல்லை. பூங்கா தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய ஆவணங்கள் தயாரிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதால், முதல்வர் தலையிட்டு பிரச்சினைக்குநிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம், வண்டலூர் பூங்கா தலைவர் பி.கே.ராஜேந்திரன் கூறியது: வண்டலூர் பூங்காவில் விலங்கு காப்பாளர்கள், பூங்கா பராமரிப்பாளர்கள், கழிவறை பராமரிப்பாளர்கள், இரவு காவலர்கள் என மொத்தம் 159 நிரந்தர பணியிடங்கள் உள்ளன. இதில், 62 பேர் மட்டுமே தற்போது பணியாற்றி வருகின்றனர்.
மற்றவர்கள் ஓய்வு பெற்று விட்டனர். தற்போது,94 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் தற்காலிக தொழிலாளர்கள், 10 ஆண்டு கடந்தவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.
பூங்கா நிர்வாகம் கருத்துரு அனுப்பியும் அரசு பணி நிரந்தரம் செய்வதில் காலதாமதம் செய்கிறது. இதில் பல நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே தமிழக முதல்வர் இதில் தனி கவனம் செலுத்தினால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இதனால் முதல்வர் கவனத்தை ஈர்க்க வேண்டிய நாங்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
சட்டமன்ற, மக்களவை உறுப்பினர்கள், துறை அமைச்சர், துறை செயலாளர் ஆகியோரிடம் நாங்கள் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. புதிய பணியிடங்களை நாங்கள் கேட்கவில்லை. காலி பணியிடங்களை நிரப்பவும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரம் செய்ய கோரிக்கை வைக்கிறோம். ஏழைத் தொழிலாளரின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றார்.