Published : 26 Feb 2018 08:00 AM
Last Updated : 26 Feb 2018 08:00 AM

இந்துத்துவா என்ற பெயரில் பிரிவினைவாதத்தை அனுமதிக்க முடியாது: சசிதரூர் எம்.பி. திட்டவட்டம்

இந்துத்துவா என்ற பெயரில் இந்தியாவில் ஒருபோதும் பிரிவினைவாதத்தை அனுமதிக்க முடியாது என்று தான் எழுதிய ‘ஒய் ஐ ஆம் ஏ ஹிந்து’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் சசிதரூர் எம்பி தெரிவித்தார்.

சசிதரூர் எம்பி எழுதிய ‘‘ஒய் ஐ ஆம் ஏ ஹிந்து’’ என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி.ராமசாமி அய்யர் பவுண்டேஷனில் நடைபெற்றது. மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி புத்தகத்தை வெளியிட, சசிதரூர் பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் சசிதரூர் பேசியதாவது:

நான் சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவன். இந்துத்துவா என்பது இந்தியாவில் ஆதிகாலம் தொட்டு இருந்து வந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இதிகாசங்களிலும்கூட இந்துத்துவம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் உண்மையான இந்துத்துவம். ஆனால் தற்போது இந்துத்துவா என்ற பெயரில் சில அமைப்புகள் நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்டி வருகின்றன. இந்த புண்ணிய பூமியில் அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதை திட்டவட்டமாக கூறுகிறேன்.

அரசியலுக்கான ஆயுதமாக இந்துத்துவா பயன்படுத்தப்படுகிறது. உண்மையான இந்துத்துவம் என்பது தனிப்பட்ட மதத்தை போதிக்கவில்லை. மனிதநேயத்தைத்தான் போதிக்கிறது. இதை தவறுதலாக புரிந்து கொண்டவர்களால்தான் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. மதத்தின் பெயரால் மக்களின் நம்பிக்கைகளுக்கு ஊறு விளைவிக்கக்கூடாது. இந்து மதம் அனைத்து மக்களையும் சமமாகத்தான் பாவிக்கிறது. இதைத்தான் ‘ஒய் ஐ ஆம் ஏ ஹிந்து’’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பேசும்போது, “இந்துத்துவா என்பது நம்முடைய அடையாளம்தானே அன்றி, அதுவே நம்மை முழுமையாக ஆளக்கூடாது. இந்துத்துவம் என்ற பெயரில் இந்த பூமியில் ஒருவர்கூட நிச்சயமாக பாதிக்கப்படக் கூடாது. இதைத்தான் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களும் வலியுறுத்துகின்றன. அனைத்து சமூக மக்களுக்கும் பொதுவான அரசியலமைப்புச் சட்டம் நமக்கு தந்துள்ள வெளிப்படையான சுதந்திரத்தின்படி மதங்களின் ஆளுமை இருக்க வேண்டும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் சிபிஆர் பவுண்டேஷன் தலைவர் நந்திதா கிருஷ்ணன், பவுண்டேஷனின் செம்மொழி துறைத் தலைவர் முனைவர் வி.மோகன், ஆராய்ச்சி படிப்புகளுக்கான துறைத் தலைவர் முனைவர் ஜி.ஜெ.சுதாகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x