

சென்னை: மாநில அரசுகளை செயல்படவிடாமல் தடுக்கும் மத்திய அரசை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ள போராட்டத்தை மதிமுக வரவேற்பதாக அக்கட்சி பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “கேரளாவில் மக்கள் நல அரசான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசின் மீது மத்திய அரசு தொடுத்து வரும் தாக்குதலைக் கண்டித்தும், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டைப் பாதுகாக்கும் வகையில் 08.02.2024 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடு முழுவதும் தர்ணா போராட்டத்தினை நடத்த உள்ளது. தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப், புது டெல்லி என பல மாநிலங்களிலும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை செயல்படவிடாமல் தடுத்து வைத்து, கூட்டாட்சித் தத்துவத்தைத் தொடர்ந்து சிதைத்து வரும் நிலையில், இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ள இப்போராட்டத்தை மறுமலர்ச்சி திமுக வரவேற்கிறது. பாராட்டுகிறது. மதிமுக நிர்வாகிகள் இப்போராட்டத்தினை ஆதரித்து உரையாற்றுவார்கள்." என வைகோ கூறியுள்ளார்.