

வழக்கமாகப் பிரதமர் மோடிதான், ‘மனதின் குர’லை வானொலி மூலமாக மக்களிடம் பகிர்ந்துகொள்வார். ஆனால், பிப்ரவரி 3 அன்று, ‘பிரதமர் மோடிக்கு லடாக் மக்களின் (இறுதி) மனதின் குரல்’ என்னும் தலைப்பில் ஒரு காணொளி வெளியானது. சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக் பேசியிருந்த அந்தக் காணொளியில், பிப்ரவரி 3 அன்று, லே பகுதியில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தின் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டக்கூறு 2019இல் ரத்துசெய்யப்பட்டு, அம்மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இதைக் கண்டித்து, காஷ்மீர் அரசியல் கட்சிகள் இன்றைக்கும் போராடிவரும் நிலையில், ஆரம்பத்தில் இந்நடவடிக்கையை வரவேற்ற லடாக் மக்கள் - கடந்த சில ஆண்டுகளாகவே அதிருப்தியில் உள்ளனர். அரசமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்ட வணையின்கீழ் லடாக்கைக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி அவ்வப்போது போராட்டம் நடத்துகின்றனர்.
இந்தச் சூழலில், ‘பிப்ரவரி 19 அன்று டெல்லியில் உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் முன்னிலையில் லடாக் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறும்’ என பிப்ரவரி 2 அன்று மத்திய அரசு அறிவித்திருந்தது. மறுநாளே இந்த மாபெரும் போராட்டம் நடந்திருக்கிறது. மத்திய அரசு அமைத்த குழுக்களால் எந்தப் பலனும் ஏற்படவில்லை என்பதுதான் லடாக் மக்களின் அதிருப்திக்கு முக்கியக் காரணம்.
இத்தனைக்கும் ஆறாவது அட்டவணையின்கீழ் லடாக் கொண்டுவரப்படும் என்னும் வாக்குறுதியை பாஜக இரண்டு தேர்தல்களில் (2019 மக்களவை, 2020 லடாக் தன்னாட்சி மலையக மேம்பாட்டு கவுன்சில்) முன்வைத்து வெற்றியும் பெற்றது. சமீபத்திய போராட்டத்தின்போது, பாஜகவின் தேர்தல் அறிக்கைகளை மேடையில் வாசித்துக்காட்டிய சோனம், “வாக்குறுதி நிறைவேறுவதில் தாமதமாகிவிட்டதுதான்.
ஆனால், நாங்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்” என்று நாசூக்காக, அதேவேளையில் உறுதியுடன் மத்திய அரசை எச்சரித்தார். லடாக் பகுதியின் இயற்கை வளங்களைச் சூறையாடும் பெருநிறுவன முதலாளிகளுக்கு, லடாக்கின் மக்கள் பிரதிநிதிகள் உடந்தையாக இருப்பதாக சோனம் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டும் பாஜகவை அதிரவைத்திருக்கிறது. லடாக் பகுதியில் ஊழல் முறைகேடுகள் அதிகரித்திருப்பதாகவும் சோனம் விமர்சித்திருக்கிறார்.
நிலம், சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாகச் சட்டம் இயற்றிக்கொள்ளும் தன்னாட்சி உரிமையை, பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு ஆறாவது அட்டவணை வழங்குகிறது. இமயமலைப் பகுதிகளில் அமைந்திருக்கும் மாநிலங்களில் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதால் பல பேரழிவுகள் ஏற்படுகின்றன.
அந்த நிலை லடாக்குக்கு நேர்ந்துவிடாதிருக்க ஆறாவது அட்டவணை அவசியம் என்பதே இங்குள்ளவர்களின் கோரிக்கை. மத்திய அரசு செவிசாய்க்காவிட்டால், சீன எல்லைப் பகுதியான லடாக்கில் பதற்றம் அதிகரிக்கும் என்பதே நிதர்சனம்!
- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in