

சென்னை: பயிர் அறுவடைக்குப் பின்பு உள்ளமதிப்புக்கூட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கடன்பெறும் திட்டத்தை விவசாயிகள்பயன்படுத்திக் கொள்ளும்படி அமைச்சர் எம்ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு பயிர் அறுவடைக்குப் பிறகு, விளைபொருட்களை காய வைத்தல், சுத்தம் செய்தல், தரம் பிரித்தல், மதிப்பு கூட்டுதல் உள்ளிட்டவற்றுக்காக வேளாண் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, வேளாண் கட்டமைப்பு நிதியின் (AIF) கீழ் கடன் வசதி பெறும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-21 -ல் தொடங்கப்பட்ட இத்திட்டம், 2032-33 வரை செயல்பாட்டில் இருக்கும்.
இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு,7 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 3 சதவீதம் வட்டி குறைப்பு வழங்கப்படுகிறது. கடன் தவணைத் தொகையை திருப்பி செலுத்த விலக்களிக்கப்பட்டுள்ள 2ஆண்டுகள் உட்பட, அதிகபட்சம் 7 ஆண்டுகளுக்குள் கடன் திருப்பி செலுத்தப்பட வேண்டும். ரூ.2 கோடி வரை கடன் உத்தரவாதம் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், விவசாயக் குழுக்கள், பெண் தொழில் முனைவோர், கிராமப்புறஇளைஞர்கள், வேளாண் தொழில்முனைவோர், புதிதாக தொழில்தொடங்க முன்வரும் நிறுவனங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், சுயஉதவிக்குழுக்களின் கூட்டமைப்புகள், கூட்டுப் பொறுப்புக் குழுக்கள், மத்திய, மாநில அமைப்புகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் முன்மொழியப்படும் அரசு, தனியார் பங்கேற்புடன் கூடிய அமைப்புகள், வேளாண் விளைபொருட்கள் விற்பனைக் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்புகள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
கட்டமைப்பு வசதிகள்: இத்திட்டத்தின் மூலம் மின்னணுசந்தையுடன் கூடிய விநியோக தொடர் சேவை, சேமிப்புக் கிடங்குகள், சேமிப்பு கலன்கள், சிப்பம் கட்டும் கூடங்கள், தரம் பிரிப்பு மற்றும் வகைப்படுத்துவதற்கான இயந்திரங்கள், குளிர்பதன வசதிகள், முதன்மை பதப்படுத்தும் மையங்கள், பழுக்க வைக்கும் அறைகள் போன்ற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
இத்திட்டம் குறித்த விரிவான தகவல்களை அறியவும், விண்ணப்பிக்கவும் www.agriinfra.dac.gov.in இணையதளத்தில் அறியலாம். மேலும், அந்தந்த மாவட்டத்தில் உள்ள வேளாண்மை துணை இயக்குநர்கள் (வேளாண் வணிகம்) மற்றும் மாவட்ட தொழில் மையங்களையும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.