Published : 06 Feb 2024 06:20 AM
Last Updated : 06 Feb 2024 06:20 AM
சென்னை: அமெரிக்காவில் உள்ள சிலைகளை மீட்கும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்ட வேண்டும் என்று தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்திலுள்ள பழமையான கோயில் சிலைகளை வெளிநாட்டுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்யும் நிலை உள்ளது. கடந்த காலங்களில் திருடப்பட்ட பல கோடி மதிப்பிலான சிலைகள் வெளிநாட்டில் இருக்கிறது.
தமிழகத்திலுள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விரைந்து சிலைகளை மீட்டு கொண்டு வருவதற்கான பணிகளை செய்ய வேண்டும்.
தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் திருடுபோன 2,600 சிலைகள் அமெரிக்காவில் உள்ளதாக தெரிகிறது. சிலைகளை மீட்பது தொடர்பாக அந்த நாட்டுடன் ஒப்பந்தம் போட்டு, சிலைகளை மீட்கக்கூடிய பணிகளை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செய்து வருகிறது.
சிலைகளை மீட்பு தொடர்பாக முக்கிய குற்றவாளிகளான 6 பேரை கைது செய்து அழைத்து வரவேண்டும் என்று அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டது. இதுதொடர்பாக 2021-ம் ஆண்டு சம்மனும் வழங்கப்பட்டது.
தமிழக சிலை கடத்த தடுப்பு பிரிவு அதிகாரிகளால் குற்றவாளியை பிடிப்பதில் தாமதம் ஏற்படுவதால், சிலைகள் மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் சுமார் ரூ.1,100 கோடி மதிப்பிலான சிலைகள் உள்ளன. குறிப்பாக, தமிழகத்தின் நடராஜர் சிலை உட்பட 10-க்கும் மேற்பட்ட சிலைகள் அங்குள்ளன.
அந்த சிலைகளை மீட்டு கொண்டு வருவதற்கான பணிகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் செய்ய வேண்டும். காணாமல்போன சிலைகளை கண்டுபிடிப்பது தொடர்பாக புகார் பெறப்பட்ட உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமீப காலத்தில் முதல் தகவல் அறிக்கை குறைந்து வருகிறது. உயர் அதிகாரிகள் நீதிமன்றம் சென்று முழு விவரத்தையும் தெரிவித்தால் மட்டுமே சிலைகளை மீட்பது எளிதாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT