Published : 06 Feb 2024 06:20 AM
Last Updated : 06 Feb 2024 06:20 AM

‘எனக்கு வேண்டாம் போதை; நமக்கும் வேண்டாம் போதை' - 3,397 பேர் விழிப்புணர்வு வாசகம் உருவாக்கி உலக சாதனை

ஆவடி காவல் ஆணையரக ஆயுதப்படை மைதானத்தில் நேற்று பள்ளி மாணவ - மாணவிகள் 3,397 பேர் ‘எனக்கு வேண்டாம் போதை நமக்கும் வேண்டாம் போதை' என்ற விழிப்புணர்வு வாசகத்தை உருவாக்கி உலக சாதனை புரிந்தனர்.

ஆவடி: ஆவடி காவல் ஆணையரக ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி மாணவ - மாணவிகள் 3,397 பேர் ‘எனக்கு வேண்டாம் போதை நமக்கும் வேண்டாம் போதை' என்ற விழிப்புணர்வு வாசகத்தை உருவாக்கி உலக சாதனை புரிந்தனர்.

ஆவடி காவல் ஆணையரகம், ஏசியா புக் ஆஃப் ரெகார்ட்ஸுடன் இணைந்து, பள்ளி மாணவ - மாணவிகளின் பங்கேற்பில் உலக சாதனையை உருவாக்கும், மாபெரும் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேற்று ஆவடி காவல் ஆணையரக ஆயுதப்படை மைதானத்தில் நடத்தியது.

தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் குமரகுருபரன், திருவள்ளூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, ஆவடி காவல் ஆணையர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 126 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 3,397 மாணவ - மாணவி கள் பங்கேற்று, ‘எனக்கு வேண்டாம் போதை, நமக்கும் வேண்டாம் போதை’ என்ற விழிப்புணர்வு வாசகத்தை உருவாக்கி, உலக சாதனை புரிந்தனர். இந்த சாதனையை உலக சாதனையாக ஏசியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் அங்கீகரித்தது.

தொடர்ந்து, டிஜிபி சங்கர் ஜிவால் முன்னிலையில், பள்ளி மாணவ - மாணவிகள் போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதி மொழியை ஏற்றனர்.

இந்நிகழ்வுகளின் போது, செய்தியாளர்களிடம் டிஜிபி சங்கர் ஜிவால் கூறியதாவது: தென்மாநிலங்களை பொறுத்தவரை தமிழகத்தில் போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக அதிக அளவில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனால், தற்போது, போதைப்பொருட்கள் புழக்கம் முன்பு இருந்ததை விட குறைவாகவே உள்ளது.

அதுமட்டுமல்லாமல், பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள், ஐ.டி. ஊழியர்கள் மத்தியில் போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x