Published : 27 Feb 2018 09:20 PM
Last Updated : 27 Feb 2018 09:20 PM

லிப்ட் கேட்ட சிறுவன்; இரக்கப்பட்ட வழக்கறிஞர்: நடந்ததோ வழிப்பறி

குன்றத்தூர் தாம்பரம் நெடுஞ்சாலையில் வழக்கறிஞரிடம் லிப்ட் கேட்பது போல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட 10 சிறுவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

தாம்பரத்தில் வசிப்பவர் சிவசுபரமண்யம். வழக்கறிஞராக தொழில் செய்கிறார். அம்பத்தூர் எஸ்டேட்டில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சட்ட ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்றிரவு வழக்கம் போல் மதுரவாயலிலிருந்து தனது வீட்டுக்கு மதுரவாயல்-தாம்பரம் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது சாலையில் சிறுவன் ஒருவன் தனியாக பரிதாபமாக நின்றபடி லிப்ட் கேட்டுள்ளான். சிறுவனைப்பார்த்த வழக்கறிஞரும் பாவம் சிறுவன் போகும் வழிதானே இறக்கி விடுவோம் என்று வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

உடனடியாக அந்த சிறுவன் மோட்டார் சைக்கிளின் சாவியை எடுத்துக்கொள்ள வழக்கறிஞர் சுதாரிப்பதற்குள் பக்கத்தில் உள்ள புதரிலிருந்து 9 சிறுவர்கள் அவரை சூழ்ந்துக்கொண்டுள்ளனர். அவர்களிடம் ஆயுதங்கள் இருந்துள்ளது.

வழக்கறிஞரை மிரட்டி அவரிடமிருந்த இரண்டு விலை உயர்ந்த செல்போன், லாப்டாப், 3 பவுன் தங்கச்சங்கிலி, கையிலிருந்த ரொக்கப்பணத்தை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர். அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் சிவசுப்ரமணியம் இது குறித்து குன்றத்தூர் போலீஸில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறுவர்களை தேடி வருகின்றனர்.

சாலையில் லிப்ட் கேட்ட சிறுவனுக்கு உதவி செய்ய நினைத்த வழக்கறிஞரிடம் வழிப்பறி செய்துள்ளதும், அதை 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் செய்திருப்பதும் சென்னையில் வாகன ஓட்டிகள், இரவில் தனியே செல்பவர்களின் பாதுகாப்பு எந்த அளவுக்கு உள்ளது என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x