Published : 06 Feb 2024 04:04 AM
Last Updated : 06 Feb 2024 04:04 AM
புதுக்கோட்டை: வரும் மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியது: பாஜக கூட்டணியில் இருந்து பழனிசாமி விலகிய பின், அவரை நம்பி எந்தக் கட்சியும் கூட்டணி வைக்க இதுவரை முன் வரவில்லை. கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைக்கு அமைக்கப்பட்ட குழுவினர், யாராவது வருவார்களா என்று வாசலைப் பார்த்து சோகத்தில் காத்துக் கிடக்கின்றனர். ஆனால், எங்களுடன் இணைந்து தேர்தலை சந்திக்க பல கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் கோடநாடு கொலை வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தனக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக திமுக அரசு-டன் பழனிசாமி மறைமுகமாக கூட்டு வைத்துள்ளார். தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த, பழனிசாமியிடம் இருந்து அதிமுகவை மீட்கும் எங்களது லட்சியம் நிறைவேறும். இவ்வாறு அவர் பேசினார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: வரும் தேர்தல் மக்களவைத் தேர்தல் என்பதால் தேசியக் கட்சியின் தலைமையில் தான் கூட்டணி. சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடக்கும் போது தான் எங்களுடைய தலைமையில் கூட்டணி இருக்கும். கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சி தந்ததால் மீண்டும் பிரதமராக மோடிதான் வர வேண்டும். சின்னம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தேர்தலில் உறுதியாக எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும். அந்தச் சின்னத்தில் தான் நாங்கள் போட்டியிடுவோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT