“போலி வழக்கறிஞர்களை ஊக்குவிக்க வேண்டாம்” - வழக்கறிஞர்களுக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் வேண்டுகோள்

நீதிபதி எஸ்.வைத்தியநாதனுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. |  படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
நீதிபதி எஸ்.வைத்தியநாதனுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
Updated on
1 min read

மதுரை: “போலி வழக்கறிஞர்களை உண்மையான வழக்கறிஞர்கள் ஊக்குவிக்கக்கூடாது” என மேகாலயா தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

உயர் நீதிமன்ற மதுரை கிளை அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதனுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இதில் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பேசியதாவது: “10 ஆண்டு நீதிபதி பணியில் 4 ஆண்டுகள் மதுரையில் பணிபுரிந்துள்ளேன். நீதிமன்ற நடவடிக்கையில் நான் யாருக்கும் பாகுபாடு பார்த்ததில்லை.

அதே நேரத்தில் வழக்கறிஞர்கள் மனம் புண்படி பேசியிருந்தால், அது வேலை நிமித்தமாகவே பேசியிருப்பேன். தனிப்பட்ட முறையில் இருக்காது. அப்படி தவறு இருந்தால் மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நீதி பரிபாலனத்துக்கு முக்கியமானது சமரசம். அதை பல வழக்குகளில் செய்துள்ளேன். அவ்வாறு செய்வதால் வழக்குகள் முடிவுக்கு வரும். ஒரு வழக்கு 5, 10 ஆண்டுகளாக நடக்கும் போது அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும்.

சமரச தீர்வுக்கு பிறகு வழக்கு நீதிமன்றம் வந்தால் விரைவில் முடியும். படிப்படியாக தான் முன்னேற வேண்டும். வழக்காடிகளை ஏமாற்றக்கூடாது. ஏமாற்றுவது துரோகம். போதுமான நீதிபதிகள் இல்லை, வழக்குகள் நிலுவையில் உள்ளது என்கின்றனர். உரிமையியல் நீதிபதிகள் பணியிடங்கள் அதிகளவில் உள்ளன. இளம் வழக்கறிஞர்கள் உரிமையியல் நீதிபதிகள் பணித் தேர்வுகளில் வெற்றிப்பெற்று நீதிபதிகளாக வரலாம். இதனால் மதுரை இளம் வழக்கறிஞர்களுக்கு நல்ல வாய்ப்புள்ளது.

நிறைய போலி வழக்கறிஞர்கள் உள்ளனர். தமிழகத்தில் 35 சதவீதம் போலி வழக்கறிஞர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்ல வழக்கறிஞர்களுக்கான வாய்ப்புகளை போலி வழக்கறிஞர்கள் கெடுத்து வருகின்றனர். இதை கட்டுப்படுத்தாவிட்டால் போலி வழக்கறிஞர்களின் கீழ் பணிபுரியும் நிலை நல்ல வழக்கறிஞர்களுக்கு ஏற்படும்.

இதனால் போலி வழக்கறிஞர்களை ஊக்குவிக்க வேண்டாம்” என்றார். விழாவில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்கள் ஜெ.அழகுராம்ஜோதி, பி.ஆண்டிராஜ், ஜெ.ஆனந்தவள்ளி எம்.கே.சுரேஷ், வி.ராமகிருஷ்ணன், பொதுச் செயலாளர் ஆயிரம் கே.செல்வகுமார், டி.அன்பரசு, பி.கிருஷ்ணவேணி, ஆர்.வெங்கடேசன், வி.எஸ்.கார்த்தி ஆகியோர் பேசினர். நீதிபதிகள், பதிவாளர்கள், அரசு வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in