Published : 22 Feb 2018 08:57 AM
Last Updated : 22 Feb 2018 08:57 AM

மொபைல்களுக்கு 13 இலக்க எண்ணா?: பிஎஸ்என்எல் நிறுவனம் மறுப்பு

பிஎஸ்என்எல் மொபைல் போன்களுக்கு 13 இலக்க எண்கள் வழங்கப்பட உள்ளதாக வெளி யான தகவல் தவறானது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் உள்ளிட்ட அனைத்துத் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் மொபைல் போன்களுக்கு 10 இலக்க எண்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது மொபைல் போன்களுக்கு 13 இலக்க எண்களை வழங்க உள்ளதாகவும், வரும் ஜூலை மாதம் முதல் இத்திட்டம் அமலுக்கு வர உள்ளதாகவும் வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேற்று வைரலாக தகவல் பரவியது.

இந்நிலையில், இத்தகவல் தவறானது என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, அந்நிறுவனத்தின் அதி காரி ஒருவர் கூறும்போது, ``பிஎஸ்என்எல் நிறுவனம் மொபைல் போன்களுக்கு மட்டும் சிம் கார்டுகளை வழங்குவதில்லை. மாறாக, பாயிண்ட் ஆப் செல்லிங் எனப்படும் பிஓஎஸ் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு இயந்திரக் கருவிகளுக்கும் சிம்கார்டுகளை வழங்கி வருகிறது.

இவ்வாறு இயந்திரக் கருவிகளுக்கு வழங்கப்பட்ட சிம்கார்டுகளுக்குத் தான் ஏற்கெனவே வழங்கப்பட்ட 10 இலக்க எண்களுக் குப் பதிலாக 13 இலக்க எண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்றபடி, மொபைல் போன்களுக்கு வழங்கப்பட்ட 10 இலக்க எண்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. சமூக வலைதளங்களில் வெளியான செய்தி தவறானது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x