Published : 05 Feb 2024 04:56 PM
Last Updated : 05 Feb 2024 04:56 PM

‘‘இபிஎஸ்ஸை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது நான் செய்த பாவம்’’ - ஓபிஎஸ் உருக்கம் @ மதுரை

மதுரை தெப்பக்குளம் பகுதியில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட தொண்டர் உரிமை மீட்பு குழு நிர்வாகிகளை ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

மதுரை: ‘‘கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி கே.பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது, நான் செய்த பாவம்’’ என்று மதுரையில் நடந்த தனது அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உருக்கத்துடன் கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம் மாவட்டங்கள் தோறும் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டம் நடத்தி மக்களவைத் தேர்தலுக்கு தயாராகி வருகிறார். மதுரை தெப்பக்குளத்தில் மதுரை மாவட்ட தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டம் நடந்தது. மாநகர மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலாளர் முருகேசன், எம்எல்ஏ ஐய்யப்பன் முன்னிலை வகித்தனர். ஓபிஎஸ் அணி இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் எம்எல்ஏ மனோஜ்பாண்டியன், ஓபிஎஸ் அணி கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியது: "அதிமுகவை எம்ஜிஆர் 1972-ம் ஆண்டு உருவாக்கியபோது பல சட்ட விதிகளை உருவாக்கினார். அதில் ஒரே ஒரு விதியை மட்டும் காலத்துக்கும் மாற்றமுடியாத வகையில் உருவாக்கினார். அது என்னவென்றால், தொண்டர்கள் மூலமாக தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான். ஆனால், கே.பழனிசாமி சர்வாதிகாரி போல் எம்ஜிஆர் தொண்டர்களுக்காக உருவாக்கிய எந்த காலத்திலும் மாற்றமுடியாத சட்டவிதியை காலில் போட்டு மிதித்து மாறிவிட்டார். மாவட்டச் செயலாளர்களை விலைக்கு வாங்கி இந்த திருத்தத்தை அவர் செய்துள்ளார்.

ஆனால், அவரால் தொண்டர்களை விலைக்கு வாங்க முடியாது. தொண்டர்களுக்கு அவர் செய்த துரோகத்துக்காக அவரை அதிமுகவில் இருந்து மட்டுமில்லாது அரசியலில் இருந்தே ஓட ஓட விரட்டியடிப்பேன். ஜெயலலிதா என்னை இரண்டு முறை முதலமைச்சராக நியமித்தார். நானும், எப்படி அந்த பொறுப்பை கொடுத்தாரோ அப்படி அவரது காலில் விழுந்து ஆசீ பெற்று மீண்டும் ஒப்படைத்துவிட்டேன். அதுபோல், சசிகலா, கே.பழனிசாமிக்கு முதல்வர் பதவி கொடுத்தார். ஆனால், இவர் திருப்பி கொடுத்தாரா? அது கூட பரவாயில்லை. அரசியல் நாகரிகம் இல்லாமல் கீழ்தரமாக சசிகலாவை விமர்ச்சிக்கிறார். அவரை கட்சியில் சேர்க்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என கூறுகிறார்.

கே.பழனிசாமி பல தியாகங்களை செய்தாக கூறுகிறார். முதல்வர் ஆகுவதற்கு முன் இவரை யாருக்காவது தெரியுமா? ஜெயலலிதா மறைந்த பிறகு கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் கே.பழனிசாமியிடம் இணைந்தேன். அவரை கடந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவித்ததுதான் நான் செய்த பாவம். இவரது தலைமையில் 8 முறை அதிமுக தேர்தலை சந்தித்துள்ளது. ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை. தோல்வி மேல் தோல்விகளை சந்தித்து வருவதால் தற்போது மக்களவைத் தேர்தலுக்காக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு 5 பேர் கொண்ட குழு அமைத்துள்ளார்.

ஆனால், ஒரு கட்சி கூட அவர்களிடம் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. ஜெயலலிதா இருந்தபோது தேசிய தலைவர்கள் அவரது வீட்டுக்கு கூட்டணிக்காக தவம் கிடந்தார்கள். ஆனால், அப்படியிருந்த கட்சியின் கம்பீரத்தை கே.பழனிசாமி கபளீகரம் செய்து மதிப்பில்லாத கட்சியாக்கி வருகிறார். ஜெயலலிதாவின் விசுவாசமிக்க தொண்டனாக இருந்தபடியால் 12 ஆண்டுகள் அதிமுகவின் பொருளாளராக அவர் எனக்கு பொறுப்பு வழங்கினார்.

கே.பழனிசாமியின் தவறான வழிகாட்டுதல், குளறுபடிகளால் அதிமுகவை பல பிரிவுகளாக பிளவுகளை ஏற்படுத்தி கட்சியை அழிக்கப்பார்க்கிறார். தோல்விகளுக்கு பொறுப்பேற்று கே.பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் தொண்டர்கள் உங்களை தூக்கி எறிவார்கள். அந்த காலம் வெகு தொலைவில் இல்லை" என்று ஓபிஎஸ் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x