

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நீண்ட காலமாக தனியார் வசம் இருந்து மீட்கப்பட்ட பல கோடி ரூபாய்மதிப்புள்ள சுதர்சன சபா இடத்தை, இருசக்கர வாகன நிறுத்துமிடமாக மாற்ற மீண்டும்தனியாரிடம் வழங்குவதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே 40,793 சதுர அடி பரப்பளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடம், 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் தனியாருக்கு 1927-ல் வழங்கப்பட்டது. அங்கு சுதர்சன சபா என்ற நாடக மன்றம் கட்டப்பட்டது. இதில், நாடகம், கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், புத்தக கண்காட்சிகள் நடத்தப்பட்டு வந்தன.
முதலில் ராமநாதன் செட்டியார் என்பவரால் இந்த சபா நிர்வகிக்கப்பட்டு வந்தது. பின்னர் 1994 முதல் இந்த சபாவின் செயலாளராக திமுகவைச் சேர்ந்த ஆர்.கே.ராமநாதன் என்பவர்பொறுப்பேற்றார். அதன்பின், அங்கு உரிய அனுமதியின்றி கடைகள் கட்டி உள்வாடகைக்கு விடப்பட்டன. இதனிடையே, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.19.14 கோடிதொகையை செலுத்தாமலும், குத்தகை ஒப்பந்தத்தின்படி செயல்படாமலும் இருந்ததால், அங்கிருந்த கட்டிடங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் 2021-ம் ஆண்டு சீல் வைத்தது.
இதையடுத்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்பின், 2022 பிப்.15-ம்தேதி சுதர்சன சபாவில் இருந்த நாடக மேடைதவிர மற்ற கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டன. இதையடுத்து, அங்கு பொதுக்கூட்டங்கள், வணிக நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ள நாள் வாடகைக்கு விடப்பட்டது.
இந்நிலையில், இந்த இடத்தில் இருசக்கர வாகன நிறுத்தம் அமைக்க தனியாருக்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது அங்கு நடைபெற்று வருகின்றன.
தனியாரிடம் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை சட்டப் போராட்டம் நடத்தி மீட்ட மாநகராட்சி நிர்வாகம், அந்த இடத்தை மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்க சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலரும், பாஜகவின் பிரச்சார பிரிவு மாவட்ட துணைத் தலைவருமான என்.கோவிந்தராஜ் கூறியது: தஞ்சாவூரின் வரலாற்று பதிவுகளில் ஒன்றாக இருந்த சுதர்சன சபா, தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட நிலையில், இருசக்கர வாகன நிறுத்தத்துக்காக மீண்டும் தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் எந்த நோக்கத்துக்காக அந்த இடத்தை கைப்பற்றியதோ, அந்த நோக்கம் சிதைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, அந்த இடத்தில் மீண்டும் பொதுக்கூட்டங்கள், நாடகங்கள் நடத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், இருசக்கர வாகன நிறுத்தம் அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்தின் தரப்பில் கேட்டபோது, ‘‘தஞ்சாவூர் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த காலி இடத்தில் இருசக்கர வாகன நிறுத்தம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது’’ என்றனர்.