Published : 05 Feb 2024 06:15 AM
Last Updated : 05 Feb 2024 06:15 AM

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை: கூடுதல் இடங்களை கோரும் மதிமுக, மார்க்சிஸ்ட்

சென்னை: திமுகவுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையின்போது மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூடுதல் இடங்களை கேட்டு கடிதம் அளித்துள்ளன. இதுதவிர, பிப்.12-ம் தேதி விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நேற்று முன்தினம் திமுக தேர்தல் குழுவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சந்தித்து பேசினர்.

இந்நிலையில், நேற்று மதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 2 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மதிமுக சார்பில் அவைத்தலைவர் அர்ஜூன்ராஜ், பொருளாளர் செந்திலதிபன், அரசியல் ஆய்வு மைய செயலாளர் ஆர்.அந்தரிதாஸ், தேர்தல் பணிச்செயலாளர் வி.சேஷன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பின்போது காஞ்சிபுரம், ஈரோடு, விருதுநகர் உள்ளிட்ட 5 தொகுதிகளின் பட்டியல் மதிமுக சார்பில் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சந்திப்பு முடிவில், அர்ஜூன்ராஜ் கூறும்போது, ``பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. நாங்கள் 2 மக்களவை தொகுதி, 1 மாநிலங்களவை இடமும் கேட்டுள்ளோம். இம்முறை மதிமுக கட்சி சின்னத்தில் தான் நாங்கள் போட்டியிடுவோம்” என்றார்.

மார்க்சிஸ்ட் கட்சி: இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் பி.சம்பத், மத்திய செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், என்.குணசேகரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மதுரை, கோவை தவிர்த்து கூடுதலாக தங்களுக்கு தென்காசி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் தொகுதிகளையும் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கூட்டமுடிவில் பி.சம்பத் கூறும்போது,“கடந்த முறையை விட கூடுதல் இடங்களில் போட்டியிடும் விருப்பத்தை தெரிவித்துள்ளோம். கடந்த முறை ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகள் மட்டுமே தரப்பட்டால் தேவையான முடிவு எடுக்கப்படும்” என்றார்.

வெளிநாடு சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியதும் மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

ம.நீ.ம. கட்சி: இந்நிலையில், திமுகவின் தொகுதி பங்கீட்டுக் குழுவில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி கூறும்போது,” மக்கள் நீதி மய்யம் கட்சியை அழைப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார். விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளுடன் பிப்.12-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x