

சென்னை: தமிழகத்தில் 24,766 மறுகட்டுமான திட்டப் பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்களிப்பு தொகையான ரூ.594.54 கோடியை தமிழக அரசேஏற்றுள்ளது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட நந்தனம் வள்ளீஸ்வரன் கோயில் தோட்டம், ஜோகித் தோட்டம் ஆகிய திட்டப்பகுதிகளில் ரூ.146.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 1,046 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று திறந்து வைத்தார்.
அப்போது அமைச்சர் பேசியதாவது: தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய வள்ளீஸ்வரன் கோயில் தோட்டம் திட்டப்பகுதி 1970-ம் ஆண்டு 270 சதுர அடியில் தரை மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்ட 568 குடியிருப்புகள் சிதிலமடைந்து வாழத் தகுதியற்ற நிலையில் இருந்தது.
அப்பழைய குடியிருப்புகளை அகற்றி 410 சதுரஅடி கொண்ட வள்ளீஸ்வரன் கோயில் தோட்டம் திட்டப்பகுதியில் தூண் மற்றும் 9 தளங்களுடன் 3கட்டிடங்கள், தூண் மற்றும் 11 தளங்களுடன் ஒரு கட்டிடம் என 630 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.87.53 கோடியில் கட்டப்பட்டுள்ளன.
ஜோகித் தோட்டம் திட்டப்பகுதி 1982-ம் ஆண்டு 230 சதுர அடியில் தரை மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்ட 256 குடியிருப்புகள் சிதிலமடைந்து வாழத் தகுதியற்ற நிலையில் இருந்தது. அப்பழைய குடியிருப்புகளை அகற்றி ரூ.58.66 கோடி மதிப்பில் 417 சதுர அடி கொண்டதாக, தூண் மற்றும் 13 தளங்களுடன் 416 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இப்போது திறக்கப்பட்ட திட்டபகுதிகளில் ஒரு பல்நோக்கு அறை,படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை வசதிகள் உள்ளன.
இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை, 72 திட்டப்பகுதிகளில் ரூ.2,544.19 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 23,259 அடுக்குமாடி குடியிருப்புகள் வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசைப்பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மறுகட்டுமான திட்ட பயனாளிகளின் பங்களிப்பு தொகை ரூ.5 லட்சம் முதல் 6 லட்சமாக இருந்தது. பயனாளிகளின் சிரமத்தை அறிந்த முதல்வர், பங்களிப்பு தொகையை குறைக்கும் நோக்கில், சாலை வசதிகள்,மழைநீர் வடிகால், தெரு விளக்குகள், பொது வசதி கட்டிடங்கள் போன்ற அடிப்படை வசதிகளுக்கு ஏற்படும் செலவுகளை அரசே ஏற்கும்என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பால், பயனாளிகள் பங்களிப்புத் தொகை ரூ.4 லட்சம்குறைக்கப்பட்டு, தற்போது ரூ.1.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2.5 ஆண்டுகளில் 24,766 குடும்பங்கள் செலுத்த வேண்டிய பயனாளிகள் பங்களிப்பு தொகை ரூ.594.54 கோடியை அரசே ஏற்றுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், துறை செயலர் சி.சமயமூர்த்தி, வாரிய மேலாண் இயக்குநர் சு.பிரபாகர்,இணை மேலாண் இயக்குநர் க.விஜயகார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.