

சென்னை: கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவால் பூண்டு விலை கிலோ ரூ.500 ஆக உயர்ந்துள்ளது. சமையலுக்கு முக்கிய சேர்க்கை பொருளாக பூண்டு உள்ளது. மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் பிரியாணி வாசனைக்கு பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது. அசைவ உணவு வகைகள் அனைத்துக்கும் முக்கிய சேர்க்கை பொருள் பூண்டுதான்.
தென்னிந்திய சைவ உணவு வகைகளிலும் பூண்டு இன்றியமையாத பொருளாக உள்ளது. ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் இருக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்களில் பூண்டும் ஒன்று. பூண்டுக்கு மருத்துவ குணமும் உண்டு.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பூண்டின் விலை கோயம்பேடு சந்தையில் நேற்று கிலோ ரூ.500 ஆக உயர்ந்து, இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நாட்டில் பூண்டு உற்பத்தியில் மத்திய பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. முதல் 10 இடங்களில்கூட தமிழகம் இல்லை. தமிழகத்தின் பூண்டு தேவைக்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களையே நம்பி இருக்க வேண்டியுள்ளது. இதனால் தமிழகத்தில் பூண்டு விலை எப்போதும் சற்று உயர்ந்தே இருக்கும். ஆனால் நேற்று வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக கோயம்பேடு சந்தை பூண்டு வியாபாரி வி.எம்.எஸ்.மணிகண்டன் கூறியதாவது: கோயம்பேடு சந்தைக்கு மத்திய பிரதேசத்தில் இருந்துதான் பூண்டு கொண்டுவரப்படுகிறது. வழக்கமாக தினமும் 250 டன் வரும். கடந்த 10 நாட்களாக 25 டன் மட்டுமே வருகிறது. வழக்கமாக பிப்ரவரி மாதம் இறுதி வரை பழைய பூண்டு இருப்பு வைத்து விற்கப்படும். பிப்ரவரிக்கு பிறகு புதிய பூண்டு வரும். பெரிதாக விலை உயர்வு இருக்காது.
கடந்த 2022-ம் ஆண்டு நாட்டின் மொத்த உற்பத்தி 3 மில்லியன் டன்னில், 2 மில்லியன் டன் மத்திய பிரதேசத்தில் விளைந்தது. இதனால் பூண்டு விலை கிலோ ரூ.40 வரை சரிந்தது. பெரும் நஷ்டமடைந்த விவசாயிகள் கடந்த ஆண்டு பூண்டு பயிரிடுவதை தவிர்த்தனர்.
இதனால் வரத்து குறைந்து விலை உயர்ந்துவிட்டது. கடந்த ஜூலை மாதமே கிலோ ரூ.150 வரை வந்தது. தற்போது ரூ.500 வரை வந்துவிட்டது. புதிய பூண்டு வரத் தொடங்கியதும் விலை குறைய வாய்ப்புள்ளது. அதற்கு இன்னும் 10 நாட்களுக்கு மேல் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.