

சென்னை: திமுகவில் மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் பணி ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை நடத்தி வரும் நிலையில், ஸ்பெயினில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விவரங்களை கேட்டறிந்தார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக கட்சிப்பணிகளை ஒருங்கிணைப்பதற்கான அமைச்சர் கே.என்.நேரு தலைமையிலான குழுவில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதில், நேற்று காலை திருவண்ணாமலை, ஆரணி தொகுதிக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், ஆரணி தொகுதி எம்.பி.யான காங்கிரஸைச் சேர்ந்த விஷ்ணுபிரசாத் செயல்பாட்டில் திமுகவினர் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு ஆரணி தொகுதியைத் தரக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து, மாலையில், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இந்த சூழலில், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், ஸ்பெயினில் இருந்தபடியே, தேர்தல் பணி ஒருங்கிணைப்புக் குழுவினரிடம் தற்போதைய நிலவரம் மற்றும் கட்சியினர் தெரிவிக்கும் விவரங்கள் குறித்து கேட்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.