

பழநி: நடிகர் விஜய் கட்சி தொடங்கியதால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் அர.சக்கர பாணி கூறினார்.
பழநியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பழநி முருகன் கோயிலில் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்த ‘மாஸ்டன் பிளான்' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, 60 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. திட்டப் பணிகள் நிறைவு அடைந்தவுடன் திருப்பதிக்கு நிகராக பழநி முருகன் கோயிலில் எல்லா வசதிகளும் இருக்கும். பழநி வரும் பக்தர்களுக்காக புதிய ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டு உள்ளது. விரைவில் பயன் பாட்டுக்கு கொண்டு வரப்படும். தமிழகத்தில் விலையில்லா அரிசி வழங்கப்படும் போது, எதற்கு மலிவு விலை அரிசி. தமிழகத்தில் அரிசி ஆலைகள் 700 ஆக அதிகரிக்கப் பட்டுள்ளன.
அங்கு 12 லட்சம் டன் நெல் அரைக்கப்படுகிறது. நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டு கருப்பு, பழுப்பு இல்லாத அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், தேனி உள்ளிட்ட இடங்களில் அரிசி ஆலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரூ.400 கோடியில் ‘செமி குடோன்' அமைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உணவுப் பொருள் விலை உயர்வை கட்டுப் படுத்த எனது தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். நடிகர் விஜய் கட்சி தொடங்கியதால் திமுக-வுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.