வலுவான தலைவர் மோடி: ரஜினிகாந்த் பாராட்டு

வலுவான தலைவர் மோடி: ரஜினிகாந்த் பாராட்டு
Updated on
2 min read

தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்னை வந்த பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். ‘‘இந்தியாவின் வலுவான தலைவர் மோடி. அவர் நினைத்தது வெற்றி பெற வாழ்த்தினேன்’’ என்று ரஜினி தெரிவித்தார்.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக ஞாயிற்றுக் கிழமை சென்னை வந்தார். மீனம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக மாலை 6.35 மணிக்கு போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வந்தார். அவரை ரஜினி மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். வீட்டுக்குள் மோடி சென்றதும் கதவு மூடப்பட்டது. பத்திரிகையாளர்கள், கேமராமேன்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

வீட்டுக்குள் சென்றதும் மோடிக்கு ரஜினி சால்வை அணிவித்தார். ரஜினிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். ரஜினியுடன் சுமார் 50 நிமிடங்கள் மோடி பேசிக் கொண்டிருந்தார். இரவு 7.25 மணிக்கு மோடியும் ரஜினியும் ஒன்றாக வெளியே வந்தனர். வெளியில் காத்திருந்த நிருபர்களைப் பார்த்த மோடி, அவர்கள் அருகே வந்தார். பின்னர் இருவரும் நிருபர்களைப் பார்த்து கை அசைத்தனர். மகிழ்ச்சியோடு கட்டித் தழுவிக் கொண்டனர் .

அப்போது நிருபர்களிடம் ரஜினி கூறியதாவது:

இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை.மோடி எனது நல்ல நண்பர். எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தார் மோடி.ஒவ்வொரு வாரமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார். இன்றைக்கு என் வீட்டுக்கு வந்து டீ சாப்பிட விரும்பினார். அதன்படி நானும் அவரை வரவழைத்து உபசரித்தேன். அவர் என்னோடு டீ சாப்பிட்டார்.

மோடியின் வருகை எனக்கு சந்தோஷத்தை அளித்துள்ளது. அவர் இந்தியாவில் வலுவான தலைவர். திறமையான நிர்வாகி. அவருக்கு எனது வாழ்த்துக்கள். எல்லாம் நல்லபடி நடக்க வாழ்த்துகிறேன். அவரது எதிர்காலம் சிறக்க வாழ்த்துகிறேன். அவர் நினைப்பது எல்லாம் நிறைவேற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு ரஜினி கூறினார்.

பின்னர் மோடி பேசும்போது, “தமிழ்நாட்டில் நாளை புத்தாண்டு. எனவே, எல்லோருக்கும் வாழ்த்துக்கள்” என்று மட்டும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மோடி புறப்பட்டார். அவருக்கு கைகொடுத்து வழியனுப்பி வைத்தார் ரஜினி.

இந்த சந்திப்பின்போது பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ், மாநில அமைப்புச் செயலாளர் மோகன்ராஜுலு ஆகியோர் உடன் இருந்தனர்.

மோடி ரஜினி சந்திப்பு மரியாதை நிமித்தமா னது என்று கூறப்பட்டாலும் இருவரும் மக்களவைத் தேர்தல் நிலவரம் குறித்து பேசிய தாகவே கூறப்படுகிறது. நாட்டின் நலன் கருதி பாஜக கூட்டணியை ரஜினி ஆதரிக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் கடந்த சில நாட்களாக பேசி வந்தனர். இந்நிலையில், ரஜினியை அவரது வீட்டுக்கே வந்து மோடி சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினி - மோடி சந்திப்பு தொடர்பாக செய்தி சேகரிக்க ஏராளமான பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி கேமராமேன்கள் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் ரஜினிகாந்த் வீட்டுக்கு எதிரே உள்ள ஒரு வீட்டில் தடுத்து நிறுத்திவைக்கப்பட்டனர். சுமார் 2 மணி நேரம் நிருபர்கள் மற்றும் போலீஸார் அங்கே காத்திருந்தனர். அனைவருக்கும் ரஜினி வீட்டில் இருந்து மோர் மற்றும் மாம்பழ ஜூஸ் வழங்கப்பட்டது. இசட் பிளஸ் பாதுகாப்பில் மோடி இருப்பதால், போயஸ் கார்டன் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

வேட்டியில் வந்த மோடி:

எந்த மாநிலத்தில் பிரச்சாரம் செய்யச் சென்றாலும் அந்த மாநிலத்தின் பாரம்பரிய உடை அணிந்து செல்வதை மோடி வழக்கமாக கொண்டுள்ளார். தமிழகத்தில் பிரச்சாரத்துக்கு வரும்போது மோடி வேட்டியில் கலக்குவார் என பாஜக மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன் கூறியிருந்தார். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை சென்னையில் ரஜினியை சந்திக்க வந்த மோடி, வேட்டி அணிந்து வந்திருந்தார். மீனம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்திலும் வேட்டி, சட்டையில்தான் மோடி கலந்து கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in