Published : 04 Feb 2024 06:00 AM
Last Updated : 04 Feb 2024 06:00 AM
சென்னை: திமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான அண்ணாவின்55-வது நினைவு தினத்தையொட்டி நேற்று அவரது படத்துக்கு முதல்வர்,எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, நேற்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டில் அண்ணாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து தனது சமூகவலைதளப் பதிவில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது: தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக, அறிவு மன்னனாக வழிகாட்டிய அண்ணா நினைவுநாள். இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற கட்சியினர், அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு உழைத்துமாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு மத்தியில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும். எண்ணித் துணிக கருமம்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலுஎம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், எம்.பி.கள்,எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின்அனைத்து பிரிவு நிர்வாகிகள்,தொண்டர்கள் அமைதிப்பேரணியாக சென்று மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோல் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, கோகுல இந்திரா,நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
இதபோல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வி.கே.சசிகலா ஆகியோர் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அண்ணா படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அண்ணா நினைவு நாளையொட்டி திராவிடர் கழகத் தலைவர்கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், தந்தை பெரியாரின் தலைமகன், திராவிடர் அரசியலை, கொள்கையை முன்வைத்து புத்துரு செய்த வகையில் 56ஆண்டுகளுக்கு முன்பு புதுமையான ஆட்சியை அமைத்து தந்தவர் என புகழாரம் சூட்டினார்.
டெல்லி நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு அதிமுக சார்பில் மு.தம்பிதுரை எம்.பி., மரியாதை செலுத்தினார். மதிமுக சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோஉள்ளிட்டோர் அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதளப்பதிவில், கூட்டாட்சித்தத்துவத்துக்கும், அரசியல் மாண்புக்கும் ஆகச்சிறந்த அடையாளமாகத் திகழ்ந்தவர். அவர்தம் வழிகாட்டல்களை நினைவில் நிறுத்துவோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் அண்ணா நினைவுநாளை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சமபந்தி போஜனம் நடந்தது. இதில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT