Published : 04 Feb 2024 04:00 AM
Last Updated : 04 Feb 2024 04:00 AM
சென்னை: சென்னையில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது என்றும், கடந்த ஆண்டு 499 விபத்துகளில் 504 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்தார்.
சென்னை காவல் துறையால் மீட்கப்பட்ட பொது மக்களின் சொத்துகளை அவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்து கொண்டு, மீட்கப்பட்ட பொருட்களை பொதுமக்களிடம் ஒப்படைத்தார்.
அப்போது சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் கடந்த 2023-ம்ஆண்டு ரூ.19.21 கோடி மதிப்புள்ள,3337.41 பவுன் நகைகள், 50.53 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.3,60,73,051 ரொக்கம், 798 செல்போன்கள், 411 இருசக்கர வாகனங்கள், 28 ஆட்டோக்கள், 15 இலகுரக வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவை பொது மக்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அதேபோல், கடந்த ஆண்டு, மத்திய குற்றப் பிரிவு விசாரித்த 811 வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரூ.265 கோடி மதிப்பிலான சொத்துகளும் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டை பொறுத்தவரை 714 பேர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், 70 ரவுடிகள், 78 போதைப் பொருள் குற்றவாளிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் கைது செய்யப்பட்ட 74 குற்றவாளிகள் உட்பட 2,748 குற்றவாளிகளுக்கு கடந்த ஆண்டு நீதிமன்றத்தால் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 335 குற்றவாளிகள், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 450 குற்றவாளிகள் உட்பட 1,109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
894 வங்கி கணக்குகள் முடக்கம்: கடந்த ஆண்டு மட்டும் ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் என 933 நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. இதில் அனுமதி கோரிய 731 போராட்டங்களில் 663 அனுமதி வழங்கப்பட்டன, 68 போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டன. 2,659 கிலோ கஞ்சா, 11.4 கிலோ மெத்தம் பெட்டமைன், 104.8 கிலோ கஞ்சா சாக்லெட்டுகள் கடந்த ஆண்டில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன. போதைப் பொருட்கள் குற்றவாளிகளின் வங்கி கணக்குகளை முடக்கும் தீவிர பணியில், ரூ.43,37,482 மதிப்புள்ள 894 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. புகையிலை பொருட்களுக்கு எதிராக, 3,181 வழக்குகள் பதியப்பட்டு, 3,340 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 24,335 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
310 போக்சோ வழக்குகள் பதிவு: கடந்த ஆண்டு 499 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 504 பேர் உயிரிழந்துள்ளனர். முந்தைய ஆண்டுகளை விட, விபத்துக்களும், உயிரிழப்புகளும் சென்னையில் கடந்த ஆண்டு குறைந்துள்ளது. அதேபோல், பாலியல் வன் கொடுமை தொடர்பாக 21 வழக்குகளும், கணவர், உறவினர்களால் கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக 86 வழக்குகளும், பெண்களை கடத்துதல் தொடர்பாக 4 வழக்குகளும் என 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 310 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டைவிட குறைவாகும். அந்த வகையில், சென்னையில் கடந்த ஆண்டு குற்றச்சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT