Published : 04 Feb 2024 04:04 AM
Last Updated : 04 Feb 2024 04:04 AM
சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை ( டான்ஜெட்கோ-வை ) மூன்றாக பிரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட சங்கங்களை உள்ளடக்கிய மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் மாநிலம் தழுவிய அளவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக சென்னை மின் வாரிய தலைமையகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் மூர்த்தி, சேக்கிழார், சம்பத், சேவியர், மனோகரன், செந்தமிழன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் ( சிஐடியு ) மாநிலத் தலைவர் ஜெய் சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் கூறியதாவது: தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் மின்சாரத் துறை கடும் இழப்பை சந்தித்து வருகிறது, கடன் சுமை அதிகரித்துள்ளது. இந்த இழப்பை ஈடு செய்ய அரசு புதிய உத்தியை கையாள்கிறது. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை மூன்று நிறுவனங்களாக அரசு பிரித்துள்ளது.
இந்த மூன்று நிறுவனங்களின் பெயரில் மேலும் மேலும் கடனை வாங்கி மின் வாரியத்தை திவால் நிலைக்கு கொண்டு சென்று தனியார் மயமாக்க உள்ளனர். இதனால் மின் வாரியமே இல்லாமல் போகும். தனியாரிடம் மின் வாரியம் சென்றால் மின் கட்டணம் கடுமையாக உயரும். எனவே, இத்தகைய நடவடிக்கையைக் கைவிட வலியுறுத்தி போராடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT