Published : 04 Feb 2018 04:37 PM
Last Updated : 04 Feb 2018 04:37 PM

கச்சத்தீவு விழா; தமிழக மீனவர் உரிமையை தமிழக அரசே தாரைவார்க்கக் கூடாது: ராமதாஸ்

ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மீட்டு பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய விழாவில் ராமேஸ்வரம் பகுதி பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப்படகில் சென்று பங்கேற்கவும், அதன் மூலம் அவர்களின் உரிமையை உறுதி செய்யவும் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத் திருவிழா வரும் 23, 24 ஆகிய தேதிகளில்  நடைபெறவுள்ள நிலையில், அவ்விழாவிற்கு ராமேஸ்வரம் மீனவர்கள் நாட்டுப்படகில் செல்ல தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இந்த ஆண்டும் தமிழக அரசு தடை விதித்திருக்கிறது.

கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லும் நாட்டுப்படகு மீனவர்களின் நூற்றாண்டு கால உரிமையை பறிக்கும் செயல் கண்டிக்கத்தக்கது.

கச்சத்தீவு என்பது ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் பாரம்பரிய உரிமை ஆகும். அந்த உரிமையை  எந்த ஒப்பந்தத்தாலும் பறிக்க முடியாது. கச்சத்தீவில் 1905-ஆம் ஆண்டு ராமேஸ்வரம் சீனிக்குப்பன் படையாச்சியால் கட்டப்பட்ட புனித அந்தோணியார் தேவாலயமும் அப்படிப்பட்டதுதான். அந்த ஆலயம் இந்திய, இலங்கை மீனவர்களை ஒருங்கிணைக்கும் சக்தியாகவும் திகழ்கிறது. 1905-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை நூறாண்டுகளுக்கும் மேலாக ராமேஸ்வரம் மீனவர்கள் நாட்டுப்படகில் சென்று அந்தோணியார் கோவில் திருவிழாவில் பங்கேற்று வருகின்றனர்.

கச்சத்தீவு கடந்த 1974-ஆம் ஆண்டு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது தொடர்பான ஒப்பந்தத்தில் கூட இந்த உரிமை மறுக்கப்படவில்லை. இப்போது தமிழக மீனவர்களின் இந்த உரிமையை சிங்கள அரசு மறுக்கவில்லை. அவ்வாறு இருக்கும்போது இந்த உரிமையை பறிக்க தமிழக அரசு துணை போவதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

கச்சத்தீவு ராமேஸ்வரத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் இருப்பதால் அவ்வளவு தூரம் நாட்டுப்படகில் சென்று திரும்புவது பாதுகாப்பானதாக இருக்காது என்று கூறிதான் தமிழக அரசு தடை விதித்திருக்கிறது. தமிழக அரசின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மீனவர்களின் வாதப்படி விசைப்படகுக்கும், நாட்டுப்படகுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இருவகை படகுகளுக்கும் இடையில் எந்த வேறுபாடும்  இல்லை. நாட்டுப்படகு என்பது பாய்ச்சு வலை வீசுவதற்கு வசதியாகவும், விசைப்படகு என்பது இழுவை வலை வீசுவதற்கு ஏற்ற வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தொழிலுக்கு ஏற்ற வகையில் தான்  இரு படகுகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவே தவிர பாதுகாப்பு வசதிகளைப் பொறுத்தவரை  இரு படகுகளுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்தவை அல்ல என்பது தான் மீனவர்கள் சொல்லும் உண்மை.

அதுமட்டுமின்றி, நாட்டுப்படகுகளை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து பாதுகாப்பான கடல் பயணத்திற்கு ஏற்றவை என சான்றிதழ் அளித்துள்ளனர். நாட்டுப்படகு பாதுகாப்பானது என்பதால்தான் அதில் பயணம் செய்பவர்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. இதற்கெல்லாம் மேலாக நாட்டுப்படகில் பயணிப்பவர்களுக்கும் பாதுகாப்பு கருதி மிதவை உடை வழங்கப்படுகிறது. மேலும் பாதுகாப்புக்காக இந்திய கடலோரக்காவல் படையும், கடற்படையும் நாட்டுப்படகுகளுடன் வரும். இவ்வளவுக்குப் பிறகும் நாட்டுப்படகுகளில் பயணம் செய்வது பாதுகாப்புக் குறைவானது என்ற வாதத்தை பகுத்தறிவுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

கச்சத்தீவு விழாவுக்கு விசைப்படகுகளில் மட்டும்தான் செல்ல வேண்டும் என்று கூறுவதன் பின்னணியில் வணிக நோக்கம் உள்ளது. நாட்டுப்படகுகளில் ஏழை மீனவர்கள் மிகக்குறைந்த செலவில் கச்சத்தீவுக்கு  சென்றுவர முடியும். ஆனால், விசைப்படகுகளில் சென்றுவர வேண்டுமானால் அதிக செலவாகும். இதனால் ஏழை, நடுத்தர மக்களால் கச்சத்தீவுக்கு சென்று வர முடியாத நிலை ஏற்படும். இதையெல்லாம் கடந்து கச்சத்தீவு பயணத்தை விசைப்படகுகள் மற்றும் சிறிய வகை கப்பல்களைக் கொண்டு நடத்தப்படும் சுற்றுலாவாக மாற்றவும், அதன்மூலம் பெருமளவில் வருவாய் ஈட்டவும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்கு நாட்டுப்படகுகள் பெருந்தடையாக  இருக்கும் என்பதால் தான் அவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.

அந்தோணியார் விழாவில் பங்கேற்க நாட்டுப்படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதன் மூலம் கச்சத்தீவுக்கு பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப்படகில் எந்தவித அனுமதிச் சீட்டும் இல்லாமல் சென்று வர கச்சத்தீவு ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமை தாரை வார்க்கப்பட்டிருக்கிறது. இந்த உரிமை பறிக்கப்படுவதற்கு தமிழக அரசே துணை போகிறது. இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மீட்டு பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய விழாவில் ராமேஸ்வரம் பகுதி பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப்படகில் சென்று பங்கேற்கவும், அதன் மூலம் அவர்களின் உரிமையை உறுதி செய்யவும் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x