

உதயநிதியின் சனாதன பேச்சு ஓய்ந்த நிலையிலும், வழக்கு சர்ச்சைகள் ஓயவில்லை. சனாதன பேச்சுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு பிஹார், கர்நாடக நீதிமன்றங்களில் அடுத்தடுத்து விசாரணைக்கு வருகிறது. ஏற்கெனவே, உதயநிதியின் சனாதன பேச்சு ‘இண்டியா’ கூட்டணியில் கொத்தளிப்பை ஏற்படுத்தியது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் மற்றொரு தலைவலியாக உதயநிதி சனாதன பேச்சுக்கு எதிராகப் பதியப்பட்ட வழக்குகள் மாறிவருகின்றது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை காமராஜர் அரங்கில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ’சனாதனம்’ குறித்து பேசியது சர்ச்சையானது. அந்த மாநாட்டில் பேசிய உதயநிதி, "இந்த மாநாட்டின் தலைப்பைச் சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று போட்டுள்ளார்கள். சில விஷயங்களை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றை நாம் எதிர்க்கக் கூடாது. அவற்றை ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம்” எனப் பேசினார்.
அவரின் சனாதன பேச்சுக்கு அப்போதே சர்ச்சை எழுந்தது. உதயநிதி பேச்சு குறித்து பல்வேறு இடங்களிலும் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சில் இருந்து பின்வாங்கவில்லை, "சனாதனம் என்ற கோட்பாட்டை ஒழிக்க வேண்டும் என்றுதான் பேசினேன். இனிமேலும் அப்படித்தான் பேசுவேன். எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். அம்பேத்கர், பெரியார் ,தொல்.திருமாவளவன் ஆகியோர் ஏற்கெனவே கூறியதைத்தான் நான் பேசினேன். சனாதனம் பல நூற்றாண்டுகள் பழமையான பிரச்சினை. அதை எப்போதும் எதிர்ப்போம்" என வெளிப்படையாகவும் பேசியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பரமஹம்சா ஆச்சார்யா, சனாதனம் குறித்து பேசிய உதயநிதியின் தலையைக் கொண்டு வருவோருக்கு ரூ.10 கோடி தருவதாகக் கூறினார். அதற்குப் பதிலடி தரும் வகையில், “என் தலையை சீவ எதற்காக பத்து கோடி, சீப்புக் கொடுத்தால் நானே சீவி விடுவேன்” என நக்கலாகப் பதிலளித்தார் உதயநிதி.
அதேபோல், அவரின் இந்தப் பேச்சைக் கண்டித்து டெல்லி, பிஹார் முதலான மாநிலங்களில் போராட்டம் , வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. ஹரியாணாவில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் உதயநிதி உருவப் பொம்மையை எரித்தும், இண்டியா கூட்டணிக்கு எதிராகக் கோஷமிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, நடந்த 5 மாநில தேர்தலிலும் சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சு காங்கிரஸுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது பெரும் பிரச்னையாக உருவெடுப்பதை அறிந்து சனாதனம் குறித்து கட்சியினர் யாரும் பேச வேண்டாமென முதல்வர் ஸ்டாலின் வாய்மொழி உத்தரவிட்டார்.
ஆனால், அப்போது உதயநிதிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் இன்று விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. இதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது பிஹாரில் பதியப்பட்ட வழக்கு விசாரணை பிஹார் மாநிலம், பாட்னாவிலுள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் பிப்.13-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். வழக்கறிஞர் நேரில் ஆஜாராகி விளக்கமளிக்கலாம் என தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு எதிராக கர்நாடகாவில் தொடரப்பட்டிருந்த வழக்கில் மார்ச் 4-ம் தேதி உதயநிதி நேரில் ஆஜராக கர்நாடக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஏற்கெனவே, மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் சறுக்கலைச் சந்திக்க, இண்டியா கூட்டணியிலிருந்த உதயநிதி பேச்சுதான் காரணம் என சொல்லப்பட்டது. ஆனால், இந்த விவகாரம் உதயநிதிக்கு தேசிய அளவில் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. எனினும், மக்களவைத் தேர்தல் வேளையில் உதயநிதியின் சனாதனப் பேச்சு தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணைக்கு வருகிறது. எனவே, இதைப் பிரச்சார கருவியாகப் பயன்படுத்த பாஜக திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் சொல்லப்படுகிறது.