சட்ட விரோதமாக மணல் அள்ளிய விவகாரம்; குவாரி அதிபர்களின் ரூ.130 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத் துறை நடவடிக்கை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சட்ட விரோதமாக மணல் அள்ளிய விவகாரத்தில் குவாரி அதிபர்களின் ரூ.130.60 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுக்கோட்டை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில், 8 மணல் குவாரிகள் உள்ளிட்ட34 இடங்களில் அமலாக்கத் துறைகடந்த 12-ம் தேதி சோதனை நடத்தியது. குறிப்பாக, தொழிலதிபர்கள் திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை எஸ்.ராமச்சந்திரன் ஆகியோரது உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. மேலும், கரிகாலன், ஆடிட்டர் டி.சண்முகராஜ் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடந்தது. இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், ரத்தினம், ராமச்சந்திரன், கரிகாலன் ஆகியோர் தங்களது கூட்டாளிகளுடன் இணைந்து, பினாமி பெயரில் நிறுவனங்கள் தொடங்கி, அந்த நிறுவனங்கள் மூலம் சட்ட விரோதமாக மணல் அள்ளியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளிலும் அமலாக்கத் துறை விரிவான ஆய்வை நடத்தியது.

இந்த ஆய்வில், மாநில அரசின் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்ட மணல் அளவைக் காட்டிலும், அதிக அளவு மணல் அள்ளியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, குவாரிகளில் மணல் அள்ளப் பயன்படுத்தப்பட்ட ரூ.128.34 கோடி மதிப்பிலான 209 இயந்திரங்கள், ரத்தினம், ராமச்சந்திரன், கரிகாலன் ஆகியோரது 35 வங்கிக் கணக்குகளில் ரூ.2.25 கோடி என மொத்தம் ரூ.130.60 கோடி மதிப்பிலான சொத்துகளை தற்காலிகமாக முடக்கி இருப்பதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in