Published : 03 Feb 2024 05:27 AM
Last Updated : 03 Feb 2024 05:27 AM
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் 14-ம் நூற்றாண்டு செப்பேடு கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து பழநியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது: இந்த செப்பேட்டை பழநியைச் சேர்ந்த திருமஞ்சனப் பண்டாரம் சண்முகம், அவரது முன்னோர் பாதுகாத்து வந்துள்ளனர்.
ஏறத்தாழ 3 கிலோ எடையும், 49 செ.மீ. உயரமும், 30 செ.மீ. அகலமும் உடைய இச்செப்பேடு, ஆயிர வைசியர்சமூகம், தம் குடிகளின் கெதி மோட்சத்துக்காக பழநிமலை முருகனுக்கு திருமஞ்சனம், வில்வ அர்ச்சனை, தினசரி பூஜை செய்ய வேண்டி, பழநியில் வசிக்கும் செவ்வந்தி பண்டாரத்துக்கு ஏற்படுத்திக் கொடுத்த திருமஞ்சனக் கட்டளையை விரிவாகக் கூறுகிறது.
இந்த செப்பேடு கி.பி.14-ம்நூற்றாண்டில் (1,363-ம் ஆண்டு) தை மாதம் 25-ம்தேதி, தைப்பூச நாளில் பெரியநாயகியம்மன் சந்நிதி முன்பாக எழுதி வெளியிடப்பட்டுள்ளது.
பழநி ஸ்தானீகம், சின்னோப நாயக்கர், புலிப்பாணி, பழனிக் கவுண்டன் ஆகிய நபர்களை சாட்சிகளாக வைத்து எழுதப்பட்டுள்ளது. செப்பேட்டில் 518 பேர் கையொப்பம் இட்டுள்ளனர்.
செப்பேட்டின் முகப்பில் விநாயகர், கைலாசநாதர், பெரியநாயகி, முருகன், செவ்வந்தி பண்டாரம் மற்றும் ஆயிர வைசியரின் சின்னமான செக்கு ஆகியவை கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளன. அதில் ஆயிர வைசியரின் பிறப்பும், பெயர் காரணமும் புராண கதையுடன் சொல்லப்படுகிறது.
மேலும், செவ்வந்தி பண்டாரத்துக்கு அளிக்க வேண்டிய திருமஞ்சனக் கட்டளைக்கு, திருமணம், காதுகுத்து, சீமந்தம், காசு கடை, ஜவுளிக் கடை, எண்ணெய் கடை செக்கு ஆகியவை மூலம் வசூல் செய்ய வேண்டிய வரிப் பணத்தின் அளவுபற்றியும் விரிவாகக் குறிப்பிடுகிறது. மொத்தம் 239 வரிகளில் செப்பேடு எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு நாராயணமூர்த்தி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT