

கோவை: கோவை மருதமலை முருகன் கோயிலில் ‘லிஃப்ட்’ அமைக்கும் பணிகள், திட்ட வரைபட மாற்றத்தால் 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கோவை மருதமலை முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அடிவாரத்தில் இருந்து கோயிலுக்கு பக்தர்கள் வர மலைப்பாதை மற்றும் படிக்கட்டு பாதைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
மலையின் மீது வாகனம் நிறுத்தும் இடத்தில் இருந்து 150 படிக்கட்டுகளை கடந்து 35 மீட்டர் உயரத்துக்கு மேலே சென்று சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும். இதனால், குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியவர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, முதியவர்களும், பெண்களும் எளிதாக கோயிலுக்கு வந்து செல்ல ஏதுவாக மலையின் மேல் பகுதியில் இருந்து கோயிலுக்கு செல்லும் வகையில் ‘லிஃப்ட்’ (மின்தூக்கி) அமைக்க தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டது.
ராஜகோபுரம் படிக்கட்டை ஒட்டி, வாகன நிறுத்தகம் அருகே 2 லிஃப்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு ‘லிஃப்ட்’டிலும் ஒரே சமயத்தில் தலா 20 பேர் செல்லலாம். அங்கிருந்து 12 மீட்டர் உயரத்துக்கு ‘லிஃப்ட்’ மேலே செல்லும். பின்னர் அங்கிருந்து 40 மீட்டர் தூரம் பக்கவாட்டுப் பகுதியில் பக்தர்கள் நடந்து வந்து, அடுத்த ‘லிஃப்ட்’டில் ஏறி 8 மீட்டர் தூரம் மேலே சென்று கோயிலுக்கு செல்லலாம்.
தமிழக அரசின் இந்துசமய அறநிலையத் துறை சார்பில் மருதமலையில் ரூ.5.20 கோடி மதிப்பில் ‘லிஃப்ட்’ அமைக்கும் பணி, கடந்தாண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்டது. சில மாதங்கள் பணி மேற்கொள்ளப்பட்ட சூழலில், கடந்த 3 மாதங்களாக இப்பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, ‘‘மருதமலை முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ‘லிஃப்ட்’ அமைக்கும் பணியை விரைவாக தொடங்கி முடிக்க வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து இந்துசமய அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: ராஜகோபுரத்தை ஒட்டிய பகுதியில் ‘லிஃப்ட்’ அமைக்க திட்டமிட்ட இடத்தில் இருந்த கற்களை அகற்றி ‘லிஃப்ட்’ அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது வரை 6.15 மீட்டர் உயரத்துக்கு கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டன.
முதலில் இருந்த திட்ட வரைபடத்தின்படி 21.75 மீட்டர் உயரத்துக்கு மொத்தமாக ‘லிஃப்ட்’ தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அப்போது மேற்கொண்ட அளவைக்கும், டிஜிட்டல் மீட்டர் மூலம் மேற்கொள்ளப்பட்ட அளவைக்கும் இடையே சில வேறுபாடுகள் இருந்தன.
இதனால் திட்ட வரைபடத்தில் உயரம் மொத்தம் 23.10 மீட்டராக இருக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. கீழ்தளத்தில் உள்ள முதலிரண்டு ‘லிஃப்ட்’க்கு தளங்கள் வழக்கம்போல இருக்கும். அங்கிருந்து சில மீட்டர் நடந்து அடுத்த ‘லிஃப்ட்’க்கு செல்லும் இடத்தில், லிஃப்ட் அமைக்கும் இடம் சற்று மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றப்பட்ட திட்ட வரைபடத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கி, 6 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றனர்.