Published : 03 Feb 2024 06:26 AM
Last Updated : 03 Feb 2024 06:26 AM
சேலம்: சேலம் ஏற்காடு சாலையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் பரிமாறப்பட்ட உணவில் பல்லி கிடந்தது குறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து சமையல் கூடத்தை பூட்டி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேலம் ஏற்காடு பிரதான சாலையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரி விடுதி சமையல் கூடத்தில் மாணவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவில் பல்லி இறந்து கிடந்ததாக சமூக வலைதளங்களில் புகைப்படம் வைரலாக பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்த உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான அலுவலர்கள் சமையல் கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, சமையல் கூடவளாகத்தை சுத்தமாக பராமரிக்காததும், திறந்த வெளியில் சமையல் செய்ததும், பல்லி இருப்பதற்கான முகாந்திரங்கள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளை பின்பற்றாத காரணத்தினால் சமையல் கூடத்தை தற்காலிகமாக மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
மேலும், ஆய்வின் போது கண்ட குறைகளை நிவர்த்தி செய்யும்படி உணவுப் பாதுகாப்பு சட்டம் பிரிவு 32-ன் படி நோட்டிஸ் வழங்கப் பட்டுள்ளது.
உணவு மாதிரியும் எடுக்கப்பட்டுள்ளது. குறைகள் நிவர்த்தி செய்யப்பட்ட பின்னர், மறுஆய்வு செய்து மேல்நடவடிக்கை மேற்கொள்ளவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT