Published : 14 Feb 2018 10:05 AM
Last Updated : 14 Feb 2018 10:05 AM

கே.வி.குப்பம் அருகே இரிடியம் வாங்க வந்த கும்பல் கூண்டோடு சிக்கியது: தப்பியோடிய நபர்களை பிடிக்க நடவடிக்கை

கே.வி.குப்பம் அருகே இரிடியம் வாங்க வந்த கும்பலை காவல் துறையினர் கூண்டோடு சுற்றி வளைத்துப் பிடித்தனர். மேலும், தப்பியோடிய முக்கிய நபரை பிடிக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘‘கே.வி.குப்பம் அடுத்த தேவரிஷிகுப்பம் கிராமத்தில் கடந்த 2 நாட்களாக வெளிமாநில பதிவு எண் கொண்ட கார்கள் அடிக்கடி வந்து செல்வதை பொதுமக்கள் சிலர் பார்த்துள்ளனர். இதுகுறித்து குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் பாபுவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்பேரில், கே.வி.குப்பம் காவல் ஆய்வாளர் தீபா மற்றும் காவலர்கள் நேற்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கார்களை நிறுத்திவிட்டு நின்றிருந்த கும்பலை சுற்றிவளைத்தனர். சென்னை பதிவெண் கொண்ட 2 கார்கள், கேரளா மற்றும் கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கார்கள் என 4 கார்களை பறிமுதல் செய்தனர். மேலும், அங்கிருந்த 15 பேரை மடக்கிப் பிடித்தனர். காவல் துறையினர் சென்றபோது, அந்த கும்பலில் இருந்த சிலர் தப்பியோடினர். அவர்களை பிடிக்க முடியவில்லை என்பதால், பிடிபட்ட நபர்களை காட்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர்.

விசாரணையில், சென்னையைச் சேர்ந்த நியூட்டன், ஈஸ்வரன், சாம்ராஜ்குமார், விஜயகுமார், மது, ரஞ்சித், கொல்கத்தாவைச் சேர்ந்த தீபக்குமார் தாஸ், இமாம் ஆலம் சித்திக், டெல்லியைச் சேர்ந்த நவீன் சந்திரா ஜோஷி, ராம கிருஷ்ணா அகர்வால், மும்பையைச் சேர்ந்த பெனீசியா அபேனியா, கேரளாவைச் சேர்ந்த சம்பத், மொய்தீன், பெங்களூருவைச் சேர்ந்த ரவீந்தர்சிங் மற்றும் வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த தேவகுமார் என்று தெரியவந்தது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தொழிலதிபர்கள்.

மேலும், தப்பியோடியவர் கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்று தெரியவந்தது. இவர் தான், தொழிலதிபர்களிடம் இரிடியம் இருப்பதாக ஆசைவார்த்தைக் கூறி அனைவரையும் வரவழைத்துள்ளார். அதை நம்பியவர்கள் இரிடியத்தை நேரில் பார்க்க கே.வி.குப்பம் வந்துள்ளனர். இரிடிய சோதனையை மேற்கொள்ள பாதுகாப்பு உடையையும் எடுத்து வந்துள்ளனர்.

இரிடியும் என்பதே மோசடியான தகவல். மண்ணுளி பாம்பைப் போல் இரிடியம் மோசடியில் சில கும்பல் அவ்வப்போது ஏமாற்றி பணத்தை பறித்து வருகின்றனர். அதேபோல் இவர்களையும் ஏமாற்ற முயன்றுள்ளனர். பிடிபட்டவர்களிடம் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

எனவே, அனைவரையும் சந்தேக வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தப்பியோடி பாலசுப்பிரமணியை பிடிக்கும் பணியை தொடங்கியுள்ளோம். அவர் கைது செய்யப்பட்டால் பல தகவல்கள் தெரியவரும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x