

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை பாஜக தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக கட்சியின் தேர்தல் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. தேர்தலைச் சந்திக்க அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். தேர்தலுக்கான குழுக்கள் அமைப்பு, கூட்டணி பேச்சுவார்த்தை போன்ற பணிகளை கட்சிகள் தொடங்கியுள்ளன.
மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவும் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பு காட்டி வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று பாஜக தேர்தலைச் சந்தித்தது. இந்த முறை அந்த கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறியுள்ளது. இதனால் மற்ற சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான வேலைகளை கட்சித் தலைமை மேற்கொண்டு வரும் வேளையில், திருநெல்வேலியில் கட்சி அலுவலகத்தை முதலாவதாக பாஜக திறந்தது. அதேபோல், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தேர்தல் வேலைகளை பாஜகவினர் உற்சாகமாகத் தொடங்கியுள்ளனர்.
பூத் கமிட்டி அமைத்தல் போன்ற பணிகளை ஏற்கெனவே முடித்துள்ள பாஜக, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலகத்தை தூத்துக்குடி மச்சாது நகரில் தொடங்கியுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. கட்சியின் மாநில துணைத் தலைவரும், தொகுதி பொறுப்பாளருமான சசிகலா புஷ்பா அதனைத் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.
பாஜக மாவட்டத் தலைவர்கள் சித்ராங்கதன், வெங்கடேசன் சென்னகேசவன், தொகுதி துணை பொறுப்பாளர் விவேகம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக தமிழிசை சவுந்திரராஜன் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். இந்த முறையும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பாஜக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.