விஜய்யின் கட்சி அறிவிப்பும் ரியாக்‌ஷன்களும் | செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.2, 2024 

விஜய்யின் கட்சி அறிவிப்பும் ரியாக்‌ஷன்களும் | செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.2, 2024 
Updated on
3 min read

அரசியல் கட்சிப் பெயரை அறிவித்தார் நடிகர் விஜய்!: தமிழக வெற்றி கழகம் என்று கட்சியின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அறிவித்துள்ளார். அதேவேளையில், மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை என்றும், யாருக்கும் ஆதரவும் அளிக்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்துக்கு வழிவகுப்பது தான் தமது இலக்கு என்று நடிகர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

திரைத் துறை குறித்து அவர் குறிப்பிடும்போது, “ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்” என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் அரசியல் பார்வை என்ன?: தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் “ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்” ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி, மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் “பிளவுவாத அரசியல் கலாச்சாரம்” மறுபுறம் என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.

ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதி, மத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகத்துக்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்துக்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு, தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிற சமத்துவ கொள்கைப் பற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்” என்று நடிகர் விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.

நடிகர் விஜய்க்கு அண்ணாமலை வரவேற்பு: "தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

நடிகர் விஜய்க்கு உதயநிதி பாராட்டு: “இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் இயக்கம் ஆரம்பிக்க உரிமையுள்ளது. நடிகர் விஜய் அரசியல் இயக்கம் தொடங்கியதற்கு நாம் அனைவரும் சேர்ந்து பாராட்டு தெரிவிப்போம். அவரது மக்கள் பணி சிறக்கட்டும்” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யிடன் முற்போக்கு சிந்தனை: திருமாவளவன்: “ஜனநாயகத்தில் மக்கள் தொண்டாற்றிட யாருக்கும் எந்தவித கட்டுப்பாடும் இல்லை. யாரும், எந்த நேரத்திலும் அரசியலுக்கு வரலாம், பொதுமக்களுக்கு தொண்டாற்றலாம், அதுதான் ஜனநாயகம். அந்த வகையில் நடிகர் விஜய் கட்சியின் பெயரை அறிவித்திருப்பது வரவேற்புகுறியது. அதை வரவேற்கிறோம். நடிகர் விஜய்யின் அரசியல் சிந்தனை முற்போக்காக உள்ளதாக நான் கருதுகிறேன். அதை அவர், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என அவர் முன்வைத்திருப்பது வரவேற்கக்கூடியது” எனத் தெரிவித்துள்ளார்.

“விஜய் விமர்சித்தது திமுக, பாஜகவையே” - ஜெயக்குமார்: “யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அரசியல் என்பது பெருங்கடல். அதில் மூழ்கிப் போனவர்களும் உண்டு; நீந்தி கரை சேர்ந்தவர்களும் உண்டு. விஜய் என்னவாகப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஊழல், மதவாதம் பற்றி விஜய் தனது அறிக்கையில் விமர்சனம் செய்துள்ளது திமுக, பாஜகவுக்குதான் பொருந்தும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

விஜய் கோட்பாடு என்ன? - சீமான்: “கட்சி தொடங்குவது எளிது. தொடர்வதுதான் கடினம். தொடங்கும்போது இருக்கும் ஆர்வமும் ஈடுபாடும் கடைசி வரை இருந்தது என்றாலும் யார் வேண்டும் என்றாலும் வெல்லலாம். அதில் விஜய் மட்டும் விதிவிலக்கு கிடையாது. முதலில் என்ன கோட்பாட்டை விஜய் முன்னிறுத்த போகிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.

இன்றைக்கு இருக்கிற அரசியல் சூழலில் ஒரு நடிகர் தனது ரசிகர்களின் வாக்கை மட்டும் பெற்று அரசியலில் வென்று நாட்டை ஆள்வது என்பது கிடையாது. வெகுவான மக்களையும் ஈர்க்க வேண்டும். விஜய், மண்ணை வெல்வதற்கு முன்பு மக்களின் மனதை வெல்ல வேண்டும். மக்களின் இதயங்களை வெல்ல ஒரே ஆண்டில் முடியாது. தொடர்ந்து 10 ஆண்டுகள் பயணம் செய்ய வேண்டி வரும்" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தமிழகத்தில் என்ஐஏ அதிரடி சோதனை: தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தென்காசி என பல இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனர். வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தமிழகத்தில் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இந்தச் சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியானது. திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளும் ஒருவரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகியும் யூடியூபருமான விஷ்ணு பிரதாப் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சுமார் 5 மணிநேரமாக சோதனை நடத்தினர். இதன் முடிவில் மொபைல் போன் மற்றும் புத்தகங்களை கைப்பற்றிச் சென்றனர்.

கோவை ஆலாந்துறையில் உள்ள ஆர்.ஜி.நகரைச் சேர்ந்த ரஞ்சித் என்ற ரஞ்சித் குமார், கோவை காளப்பட்டியில் உள்ள சரஸ்வதி கார்டனைச் சேர்ந்த முருகன் ஆகிய நாம் தமிழர் கட்சியில் முன்னாள் நிர்வாகிகளின் வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்றது.

கியான்வாபி | இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு: வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியின் தரைத்தளத்தின் கீழ் உள்ள பாதாள அறையில் இந்துக்கள் வழிபாடு நடத்த வாரணாசி நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனிடையே, கியான்வாபி மசூதியின் தெற்கு பாதாள அறையில் இந்துக்கள் வழிபாடு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை கடைகளை அடைக்குமாறு அஞ்சுமன் இன்தசாமியா மசூதி அறக்கட்டளை அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹேமந்த் சோரன் வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: நில மோசடி வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தன்னை கைது செய்ததை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. வழக்கு விசாரணையின் போது, “நீங்கள் உயர் நீதிமன்றத்தில் ஏன் மனு தாக்கல் செய்யவில்லை?" என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், "உயர் நீதிமன்றங்கள் அரசியலமைப்பு நீதிமன்றங்கள். இன்று நாம் ஒருவரை இதுபோன்று அனுமதித்தால், அனைவரையும் பின்னாளில் அனுமதிக்க வேண்டும். நீதிமன்றங்கள் அனைவருக்குமானது. எனவே உயர் நீதிமன்றத்தை நாடுங்கள்" என்று தெரிவித்தனர்.

இதனிடையே, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு ராஞ்சி நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in