டாஸ்மாக் மதுபான விலை உயர்வு அமலுக்கு வந்தது: பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்வு

டாஸ்மாக் மதுபான விலை உயர்வு அமலுக்கு வந்தது: பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்வு
Updated on
1 min read

சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் மீதான விலை உயர்வு நேற்றுமுதல் அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிப்.1-ம் தேதி முதல் சாதாரண மற்றும் நடுத்தர வகை மதுபானம் குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.10, ஆஃப் பாட்டிலுக்கு ரூ.20, ஃபுல் பாட்டிலுக்கு ரூ.40 விலை உயர்த்தப்படும் என்றும், உயர்ரக வகை மதுப்பானங்கள் குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.20, ஆஃப் பாட்டிலுக்கு ரூ.40, ஃபுல் பாட்டிலுக்கு ரூ.80 மற்றும் அனைத்து பீர் வகைகளும் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 உயர்த்தப்படும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், நேற்றுமுதல் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் புதிய விலை பட்டியல் அமலுக்கு வந்தது.

அதன்படி, சாதாரண மற்றும் நடுத்தர வகை குவார்ட்டர் பாட்டில் முன்பு ரு.130 மற்றும் ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்றுமுதல் ரூ.140, ரூ.170-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல, உயர்ரக மதுபான குவார்ட்டர் பட்டில்கள் ரூ.190, ரூ.240 என விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று முதல் ரூ.20 கூடுதலாக விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது.

ஏற்கெனவே, டாஸ்மாக் கடை ஊழியர்கள் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், இந்த விலையேற்றம் மதுப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த புதிய விலையேற்றத்தால் பெரும்பாலான மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கும்போது, புலம்பிக் கொண்டே சென்றனர்.

சில பகுதிகளில், ‘டாஸ்மாக் நிர்வாகம் மதுபாட்டில்கள் விலையை ஏற்றியிருக்கிறது. அதேசமயம், நீங்களும் கூடுதலாக ரூ.10 வாங்கினால் என்ன நியாயம்?’ என ஊழியர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

எனவே, டாஸ்மாக் கடைகளில், ஊழியர்கள் கூடுதலாக ரூ.10 வாங்குவதை நிறுத்த வேண்டும் என்றும், இதனை டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதுப்பிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in