முறைகேடு செய்ததாக புகார் எதிரொலி: அரசு கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்

கல்லூரி முதல்வர் கீதா
கல்லூரி முதல்வர் கீதா
Updated on
1 min read

திருவாரூர்: முறைகேடு புகார்களைத் தொடர்ந்து, திருவாரூர் திரு.வி.க.அரசு கலைக் கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திரு.வி.க. கல்லூரி முதல்வராகப் பணியாற்றி வந்தவர் கீதா.இவர் கல்லூரிக் கல்வி இயக்குநராகவும் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், கல்லூரிக்கு நேற்றுவந்த தஞ்சை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் தனராஜன், முதல்வர் பதவியிலிருந்து கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தப் பொறுப்பை கல்லூரியின் மூத்தபேராசிரியரிடம் ஒப்படைக்குமாறும் கூறி, உயர் கல்வித் துறைமுதன்மைச் செயலாளர் உத்தரவிட்ட கடிதத்தை வழங்கினார்.

மாணவர்கள் போராட்டம்: இதனால் அதிர்ச்சியடைந்த முதல்வர் கீதா, உத்தரவு நகலை வாங்க மறுத்தார். இதனிடையே, இதுகுறித்து தகவலறிந்த கல்லூரி மாணவர்கள், முதல்வர் பணியிடை நீக்க நடவடிக்கையைக் கண்டித்து, கல்லூரி வளாகத்துக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குவந்த போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

பணியிடை நீக்கம் ஏன்?- கல்லூரி முதல்வர் பொறுப்புடன், கல்லூரிக் கல்வி இயக்குநராகவும் இருந்து வந்த கீதா மீதுபல்வேறு முறைகேடு புகார்கள்வந்ததாகவும், அரசு அலுவலர்களுக்கான வழிகாட்டுதலை மீறியூடியூப் சேனல் நடத்தி வந்ததாகவும், அதைத் தொடர்ந்து அவர்பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பே கல்லூரிக் கல்வி இயக்குநர் பணியிலிருந்து விடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கீதா கூறும்போது, "நான் யாருக்கும் பணம் கொடுத்து, கல்லூரிக் கல்வி இயக்குநர் பொறுப்புக்கு செல்லவில்லை. நீதிமன்றத்தின் வாயிலாகவே அந்த பொறுப்புக்குச் சென்றேன். மேலும், எனக்குயார் என்றே தெரியாத, தேவகோட்டையைச் சேர்ந்த ஒரு நபர் அளித்த புகாரில் நடவடிக்கை எடுத்துள்ள அதிகாரிகள், என்னிடம் எந்த விசாரணையும் செய்யாமல், ஒரு தலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனது கல்லூரி மாணவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க யூடியூப் சேனல் நடத்தினேன். அதில் மாணவர்களின் கல்வியை ஊக்கப்படுத்தும் தகவல்களைத் தவிர, வேறு எதையும் வெளியிடவில்லை. அதன் மூலம் எந்த வருமானத்தையும் நான் பெறவில்லை" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in