Published : 02 Feb 2024 06:54 AM
Last Updated : 02 Feb 2024 06:54 AM
திருவண்ணாமலை: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காதது ஏன் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பினார்.
திருவண்ணாமலையில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற காங்கிரஸ் பிரமுகர் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என்று மத்திய பாஜக அரசு தெரிவித்தது. விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக மாற்றுவோம் என்றனர். கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக சொன்னார்கள். இவற்றில் எதுவுமே நிறைவேறவில்லை.
இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது என்று பிரதமரோ அல்லது பாஜக தலைவர் அண்ணாமலையோ கூற முடியுமா? இந்திய கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 15 கோடி குடும்பங்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு. இதைப் பாராட்டி ஐநா சபை சான்றிதழ் வழங்கியது. ஆனால், தற்போதைய நிலை என்ன?
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மிகக் குறைவாக உள்ளது. ஆனால், அதிக விலைக்குபெட்ரோல், டீசலை விற்பது ஏன்?உலக அளவில் பெட்ரோல், டீசலைஅதிக விலைக்கு விற்பனை செய்வது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுதான்.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பொருளாதாரம் சீரழிந்துவிட்டது. இதை மறைக்கவே ராமர் கோயிலை கையில் எடுத்துள்ளனர். தேர்தலை முன்வைத்தே, அரசியல் ஆதாயத்துக்காக ராமருக்கு கோயில் கட்டியுள்ளனர். கட்டுமானம் முழுமை பெறாமல் குடமுழுக்கு நடத்துவது தவறு என்றுசங்கராச்சாரியார்கள், ஆன்மிகவாதிகள் கூறினர். இதையும் அவர்கள் ஏற்கவில்லை.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரைக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது. இண்டியா கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது. எனவே, கூட்டணியின் ஒற்றுமைபற்றி யாரும் கவலைப்படத் தேவைஇல்லை. இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT