Published : 01 Feb 2018 09:16 PM
Last Updated : 01 Feb 2018 09:16 PM

கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு சாதகமான பட்ஜெட்: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கருத்து

5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டம் மூலம் மிகப் பெரிய அளவிற்கு கார்ப்பரேட் மருத்துவமனைகளும் ,மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுமே பயனடையும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர். ஜி.ஆர்.ரவீந்திரநாத் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய பட்ஜெட்டில் 10 கோடி குடும்பங்களுக்கு ஆண்டொன்றிற்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

இதனால் மிகப் பெரிய அளவிற்கு கார்ப்பரேட் மருத்துவமனைகளும் ,மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுமே பயனடையும். பொது சுகாதாரத்துறையை வலுவிழக்கச் செய்து, தனியார் மருத்துவமனைகளை வலுப்படுத்தும் திட்டமாகவே இது அமையும்.

இத்திட்டத்திற்காக ஒதுக்கப்படும் ரூ.15,000 கோடிக்கும் மேற்பட்ட நிதியைக் கொண்டு, ஆயிரக்கணக்கான மருத்துவமனைகளை அரசே உருவாக்க முடியும்.

அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு இலவச சிகிச்சையை வழங்க முடியும். ஆனால், அதை விடுத்து அமெரிக்க பாணியில் மருத்துவக் காப்பீட்டை அடிப்படையாகக் கொண்ட மருத்துவத் துறையை உருவாக்குவது ஏழை எளிய மக்களின் நலன்களுக்கு எதிரானது.

தேசிய நலக்கொள்கை 2017-ல் அறிவிக்கப்பட்டுள்ளது போல், இரண்டாம்நிலை, மூன்றாம்நிலை மருத்துவ சிகிச்சைகளை தனியார் மயமாக்கும் திட்டம் இதில் அடங்கியுள்ளது.

24 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என அருண் ஜேட்லி கூறியுள்ளார். இம் மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு உருவாக்குமா? அல்லது மாநில அரசுகள் உருவாக்குமா? என்பது குறித்து விளக்கவில்லை.

ஏற்கெனவே, தமிழகத்தில் ஒரு எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால், இதுவரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை தொடங்கிட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காச நோயாளிகளுக்கு மாதம் தோறும் ரூ.500 வழங்குவது வரவேற்புக்குரியது. ஆனால், பல மருந்துகளை எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்ட காசநோய் பாக்டீரியாக்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு(Multi Drugs Resistance Tuberculosis), காசநோயை குணப்படுத்தும் புதிய மருந்துகள் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. அத்தட்டுப்பாட்டைப் போக்கிட நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது.

பொது சுகாதாரத்துறையை வலுப்படுத்தும் எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இல்லை.

கார்ப்பரேட் அரசால், கார்ப்பரேட் மருத்துவமனைக்களுக்காகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவும் அறிவிக்கப்பட்டுள்ள பட்ஜெட் தான், மத்திய அரசின் 2018-19 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்.''

இவ்வாறு டாக்டர். ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x