

சசிகலாவின் உறவினர் எனவும், பணி நிரந்தரம் செய்து தருவதாகவும் கூறி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த ஊழியர்களாகப் பணிபுரிந்தவர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த தஞ்சையை அடுத்த பனையக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த நபரின் வீட்டை பாதிக்கப்பட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனர்.
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வீரையன் என்ற அதிமுக பிரமுகர், சசிகலாவின் உறவினர் எனக் கூறி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த ஊழியர்களாகப் பணிபுரிந்த தங் களிடம் பல கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாக தூத்துக்குடியைச் சேர்ந்த வாசகர் ‘தி இந்து’வின் ‘உங்கள் குரல்’ பகுதியில் புகார் கூறியதோடு, பாதிக்கப்பட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) அவரது வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதன்படி, தமிழகத்தின் பல பகுதிகளிலுமிருந்து வந்திருந்த 50-க்கும் மேற்பட்டோர் தஞ்சாவூர் - மன்னார்குடி சாலையில் பனையக் கோட்டை கிராமத்தில் உள்ள மீனாட்சிசுந்தரம் மகன் வீரையன் (50) புதிதாகக் கட்டியுள்ள வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சென்ற னர். அப்போது பூட்டப்பட்டிருந்த வீட்டின் வாசலில் கூடி கோஷமிட்டனர்.
பக்கத்தில் பூர்விக ஓட்டு வீட்டில் வசித்து வரும் வீரையனின் தந்தை மற்றும் தாயார் பதிலேதும் கூறாமல் புதிய வீட்டுக்கு காவலாக அமர்ந்திருந் தனர். இவர்கள், வருவதை அறிந்த வீரையன் புதிதாக வாங்கிய காரில் அதிகாலையிலேயே புறப்பட்டுச் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து, தங்களுக்கு பணம் கிடைக்கும்வரை செல்வ தில்லை எனக் கூறி அந்த வீட்டின் வாசலில் அமர்ந்து பாதிக்கப்பட் டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட முருகேசன் கூறும்போது, ‘தூத்துக் குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2002-ல் அன் றைய அதிமுக ஆட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு சேர்ந்து 2012 வரை நாள் கூலி ரூ.33 வீதம் மாதம் ரூ.990 ஊதியத்துக்கு பணி நிரந்தரமாகும் என்ற நம்பிக்கையில் வேலை பார்த்து வந்தேன்.
என்னைப் போலவே தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசுப் பொது மருத்துவமனைகள், ஆரம்ப சுகா தார நிலையங்களில் மருந்தாளுநர், லேப் டெக்னீசியன், மருத்துவமனை பணியாளர், துப்புரவுப் பணியாளர், வாகன ஓட்டுநர் என 2,635 பேர் பணிபுரிந்து வந்தனர். பின்னர் அதிமுக ஆட்சியில் பல்வேறு காரணங்களை கூறி எங்களை பணியிலிருந்து நீக்கிவிட்டனர்.
அப்போதுதான் கோவை சோமனூர் ஆரம்ப சுகாதார நிலை யத்தில் ஓட்டுநராக பணிபுரிந்த எஸ். கதிர்வேல் மூலம் வீரையன் அறிமுகமானார். தான் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வின் உறவினர் என்றும் பணம் தந்தால் பணிநிரந்தரம் செய்து தருவதாகவும் கூறி தலா ரூ.60,000 முதல் ரூ.1.50 லட்சம் வரை 475 பேரிடம் சுமார் ரூ.5 கோடி வசூல் செய்தார். இந்தப் பணத்தை அதிமுக கட்சி நிதியாக முதல்வரிடம் அளித்துள்ளோம்.
உங்கள் ஃபைல்கள் இப்போது முதல்வரின் டேபிளில்தான் இருக் கிறது, நீங்கள் கவலைப்பட வேண் டாம் என்றெல்லாம் கூறினார். ஆனால், அவர் கூறியபடி நடக்காத தால் வீட்டுக்கு வந்தோம்’ என்றார். ‘அவர் சென்னையில் எங்களி டம் பணம் வாங்கிய லாட்ஜ் உள்ள திருவல்லிக்கேணி காவல் நிலை யத்தில் கடந்த ஆண்டு புகார் அளித்தோம். அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் இந்த விஷயத்தை வெளியில் சொல்லாதீர்கள்.
உங்களுக்கு சீக்கிரம் பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கிறோம். இங் கிருந்து விரைவாக சென்றுவிடுங் கள் என கூறியதால் நாங்கள் ஊருக்கு திரும்பி விட்டோம்’என கண்ணீர் மல்க கூறினார் சங்கரன் கோவில் அரசுப் பொது மருத்துவ மனையில் பணிபுரிந்த மரகதம். இந்த நிலையில், அங்கு வந்த வீரையனின் தம்பி சிவா மற்றும் உறவினர்கள், வீரையன் வெளியூர் சென்றிருப்பதாகவும், அவரிடம் பேசி 2 மாதத்தில் பணத்தை திரும்ப அளிப்பதாகவும் கூறினர்.
ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் வீரையன் நேரில் வரவேண்டும் எனக் கூறி அமர்ந்திருந்தனர். பின்னர், எப்படியும் ஒரு மாதத்துக்குள் பணத்தை திரும்ப அளிப்பதாக வீரையன் உறுதியளித்துள்ளதாக அவரது தம்பி சிவா உறுதிபட கூறியதையடுத்து மாலையில் அவர்கள் தங்கள் ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.