

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகள் அளவிலான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் கே.என்.நேரு நேற்று தொடங்கிவைத்தார். சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று, பள்ளிமாணவ, மாணவியரின் அணிவகுப்பை பார்வையிட்டு, ஒலிம்பிக் சுடரை ஏற்றி, பலூன்களை பறக்கவிட்டு விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
பின்னர்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சென்னை மாநகராட்சியின் கீழ் 419 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 175 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
ஏற்கெனவே தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தனிநபர் மற்றும் குழுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர, மழலையர் வகுப்புகளில் பயிலும் குழந்தைகளுக்கு நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
தடகளப் போட்டிகள், நீளம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் மண்டல மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 940 மாணவர்களுக்கான இறுதிப் போட்டிகள் இன்று நடைபெறுகின்றன. புள்ளிகளின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்திறன் கோப்பைகளும் வழங்கப்படுகிறது.
இதுதவிர ஏற்கெனவே மாநிலஅளவில் மற்றும் தேசிய அளவில்நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 17 மாணவ, மாணவியருக்கு தனித்திறன் கோப்பைகளும் வழங்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
இவ்விழாவில், மேயர் பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், நிலைக்குழுத் தலைவர்கள் த.விஸ்வநாதன் (கல்வி), கோ. சாந்தகுமாரி (பொது சுகாதாரம்), சர்பஜெயாதாஸ் நரேந்திரன் (வரிவிதிப்பு மற்றும்நிதி), கூடுதல் ஆணையர் சங்கர்லால் குமாவத், இணை ஆணையர் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன், துணை ஆணையர் (கல்வி) ஷரண்யா அறி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.