

சென்னை: ஹேமந்த சோரன் கைது செய்யப்பட்டிருப்பது மத்திய பாஜக அரசின் அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி பழங்குடியினத் தலைவரை துன்புறுத்துவது தரம் தாழ்ந்தது என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஹேமந்த் சோரன் புதன்கிழமை கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில், “ஹேமந்த சோரன் கைது செய்யப்பட்டிருப்பது மத்திய பாஜக அரசின் அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி பழங்குடியினத் தலைவரை துன்புறுத்துவது தரம் தாழ்ந்தது. இந்தச் செயல் விரக்தியையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் தூண்டுகிறது.
பாஜகவின் கேவலமான தந்திரமான செயல்கள் எதிர்க்கட்சிகளின் குரல்களை அடக்கிவிடாது. பாஜகவின் பழிவாங்கும் செயல்களுக்கு தலைவணங்காமல் உறுதியோடு நின்று இன்னல்களை எதிர்கொள்ளும் சோரனின் மன உறுதி பாராட்டுக்குரியது. அவரது உறுதிப்பாடு பாஜகளின் மிரட்டல் தந்திரங்களை எதிர்த்துப் போராடுவதற்கான ஓர் உத்வேகம்” எனத் தெரிவித்துள்ளார்.