Published : 01 Feb 2024 05:14 PM
Last Updated : 01 Feb 2024 05:14 PM

‘பொங்கல் போனஸ்’ அறிவித்தும் இதுவரை கிடைக்காத கலைஞர் நூலகத்தின் நூலகர்கள்!

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: கடந்த ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடும் வகையில் அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு போனஸ் அறிவித்தது. தமிழக அரசில் பணிபுரியும் "சி" மற்றும் "டி" பிரிவைச் சார்ந்த பணியாளர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு இந்த பொங்கல் போனஸ் வழங்கியது. பொங்கல் பண்டிகையை கொண்டாவதற்கு செலவிடவே, அரசு ஊழியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்படுகிறது. அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்கப்பட்டு அவர்கள் குடும்பத்தோடு பொங்கல் பண்டிகையை கொண்டாடிய நிலையில், மதுரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரிலே செயல்படும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எண்ணத்தில் உதித்த கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அறிவித்த பொங்கல் போனஸ் இதுவரை வழங்கப்படாததால் அவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இது குறித்து மதுரை கலைஞர் நூலகம் பணிபுரியும் நூலகர்கள் கூறுகையில், "கலைஞர் நூலகத்தில் 30 நிரந்தர பணி நூலகர்கள் பணிபுரிகிறார்கள். அனைவரும் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து இடமாறுதலாகி வந்தவர்கள். ஆரம்பத்தில் சில மாதமும், இந்த இடமாறுதலால் ஊதியமே வழங்கப்படவில்லை. முன்பணம் பெற்று வங்கி தவனைகளை சமாளித்து வந்தோம். அதன் பிறகு தற்போது கடந்த 2 மாதமாகதான் ஊதியமும் ஒழுங்காக வருகிறது. தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பொங்கல் போனஸ் எங்களுக்கு இன்னும் வழங்கப்படாமல் காலதாமதம் செய்யப்படுகிறது. கலைஞர் நூலகத்தில் மொத்த முள்ள 30 நூலகர்களில் 3 பேர் மாவட்ட நூலகர் அளவில் ஊதியம் பெறக்கூடிய அதிகாரிகள்.

இவர்கள் 54,500 அடிப்படை ஊதியம் பெறக் கூடியவர்கள். இவர்களுக்கு பொங்கல் போனஸ் கிடையாது. அடிப்டை ஊதியம் 9,300 பெறும் 11 நூலகர்களுக்கும் பொங்கல் போனஸ் கிடையாது. ஆனால், அடிப்படை ஊதியம் 5,200 பெறும் "சி" பிரிவு 16 நூலகர்களுக்கு முதல்வர் பொங்கல் போனஸ் ரூ.3,000 வழங்குவதாக அறிவித்து இருந்தார். ஆனால், பொங்கல் பண்டிகை முடிந்து 2 வாரங்களுக்கு மேலாகியும் பொங்கல் போனஸ் தற்போது வரை வழங்கப்படவில்லை. இதற்கு, கலைஞர் நூலகத்தில் இன்னும் நிர்வாகத் துறைக்கு அதிகாரிகள், ஊழியர்கள் நியமிக்கப்படாததே முக்கிய காரணம். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள அதிகாரிகளை கொண்டு மதுரை கலைஞர் நூலகம் இயக்கப்படுகிறது.

இந்த நூலகத்திற்கு இதுவரை தனி தலைமை நூலகர் மற்றும் தகவல் அதிகாரி நியமிக்கப்படவில்லை. கண்காணிப்பாளர் நியமிக்கப்படவில்லை. நூலர்களிலே ஒருவரே நிர்வாகப் பொறுப்பை கவனிக்கிறார். பொது நூலகத்துறைக்கு தனி ஐஏஎஸ் அதிகாரி இயக்குனராக நியமிக்கப்பட வில்லை. கல்வித் துறையை சேர்ந்த இணை இயக்குனர் ஒருவரே தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தலைமை கண்காணிப்பாளர் மற்றும் தகவல் அதிகாரியாக உள்ளார். அவரே, கலைஞர் நூற்றாண்டு நூலகப் பொறுப்பையும் சென்னையில் இருந்து கொண்டே கண்காணிக் கிறார். கல்வித் துறை பொறுப்பை பார்த்துக் கொண்டு அவரால் நூலகப் பணி நிர்வாகத்தையும் கவனிக்க முடியவில்லை.

ஆனால், கல்வித் துறை அதிகாரிகள், பொது நூலக நிர்வாகப் பொறுப்புகள் தங்கள் கையை விட்டு போய் விடக்கூடாது என்பதற்காகவே கல்வித் துறை அதிகாரியையே கூடுதல் பொறுப்பாக அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு நூலகப் பொறுப்புகளையும் கவனிக்க கூறியுள்ளனர். பொது நூலகத் துறைக்கு தனி ஐஏஎஸ் அதிகாரி நியமித்தால் மட்டுமே நூலகங்களுக்கும், அதில் பணிபுரியும் ஊழியர்கள் வாழ்வாதாரமும் உயரும்.

தற்போது பொங்கல் போனஸ் வழங்குவதற்கு கலைஞர் நூலகர்களுக்கு அரசு நிதி ஒதுக்கி விட்டது. ஆனால், அதை நூலகர்களுக்கு உரிய காலத்தில் வழங்க முடியாமல் போவதற்கு கல்வித் துறை அதிகாரிகளுடைய கூடுதல் பணிபழுவும் முக்கிய காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இது குறித்து கலைஞர் நூலக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "நிதி வந்துவிட்டது, ஒரிரு நாளில் பொங்கல் போனஸ் வழங்கப்பட்டுவிடும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x