

ராமேசுவரம்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 4 பேரை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு அந்நாட்டின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகாரமான 142 சட்டப்பிரிவைப் பயன்படுத்தி விடுதலை செய்தது. தொடர்ந்து நவம்பர் மாதம் சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 6 பேரும் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
வேலூர் சிறையிலிருந்து விடுதலையான சாந்தன், முருகன், புழல் சிறையிலிருந்து விடுதலையான ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இதனால், இவர்கள் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று விடுதலை செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் 4 பேரை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் கூறியுள்ளதாவது: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பின் உச்ச நீதிமன்றத்தால் 11.11.2022-ல் சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் ஆகிய நால்வரும் விடுதலை செய்யப்பட்டனர். இலங்கை குடிமகன்களான நான்கு பேரையும் இலங்கைக்கு வரவழைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சிகளும் பலனளிக்காததால் 4 பேரும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தனது இளமைக்காலம் முழுவதையும் சிறையில் கழித்த சாந்தன், தற்போது சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பால் சென்னை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து ஈழத்தமிழர்கள் மீது கரிசனம் கொண்டிருக்கும் தாங்கள், மனிதாபிமான அடிப்படையில் அணுகி நோய்வாய்ப் பட்டிருக்கும் சாந்தன் உட்பட 4 பேரையும் இலங்கைக்கு அனுப்பி வைக்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.