Published : 01 Feb 2024 04:07 PM
Last Updated : 01 Feb 2024 04:07 PM

“நாவடக்கத்துடன் பேச ஆ.ராசா கற்றுக்கொள்ள வேண்டும்” - ஓபிஎஸ்

ஓ.பன்னீர்செல்வம், ஆ.ராசா

சென்னை: “எம்ஜிஆரை ஆ.ராசா இழிவுப்படுத்தி பேசியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. இனி வருங்காலங்களில் நாவடக்கத்துடன் பேச ஆ.ராசா கற்றுக்கொள்ள வேண்டும்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தன்னுடைய திரைப்படங்கள் வாயிலாக திமுக ஆட்சி தமிழகத்தில் காலூன்றுவதற்கு முழுக் காரணமாக விளங்கியவர் எம்ஜிஆர். "முகத்தை காட்டினால் முப்பது லட்சம் வாக்குகள் கிடைக்கும்" என்று அண்ணாவால் போற்றப்பட்டவர் எம்ஜிஆர். கட்சிக் கணக்கு கேட்டதற்காக கட்சியை விட்டு நீக்கி “பால் குடித்த வீட்டிற்கு பாதகம்” செய்த தீய சக்திகளை அகற்றி, அஇஅதிமுக ஆட்சியை தமிழகத்துல் அமைத்து, மக்களுக்கு பொற்கால ஆட்சியை வழங்கியவர் எம்ஜிஆர்.

எம்ஜிஆர் கட்சியை விட்டு வெளியேற்றியதன் விளைவு, அவர் உயிரோடு இருக்கும் வரை தி.மு.க.வால் ஆட்சிப் பொறுப்பிற்கு வர முடியவில்லை. இதற்குக் காரணம் மக்கள் அவர்மீது வைத்திருந்த அளவற்ற அன்புதான். “தங்கத்தை மண்ணில் இருந்து தோண்டி எடுப்பார்கள். இப்போது மண்ணை தோண்டி தங்கத்தைப் புதைக்கிறார்கள்” என்று எம்ஜிஆர் மறைவின் போது வருணனை செய்யப்பட்டது. அந்த அளவுக்கு, மக்களை ஈர்க்கும் காந்த சக்தியை படைத்ததால்தான், மண்ணைவிட்டு மறைந்து பல ஆண்டுகள் கடந்தும், மக்களின் நெஞ்சங்களில் இன்றளவும் நீங்கா இடம்பிடித்து இருக்கிறார் எம்ஜிஆர்.

தன்னலத்தை ஒதுக்கி மக்கள் நலனுக்காக எம்ஜிஆர் பாடுபட்டதால்தான் மத்திய அரசு அவருக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதினை அளித்து கவுரவித்தது. மக்களின் மனங்களில் இன்றளவிலும் குடிகொண்டு இருப்பவரும், கரை படியாத கரத்துக்கு சொந்தக்காரரும், மக்கள் நலத்திற்காக மகத்தான திட்டங்களைத் தீட்டியவருமான எம்ஜிஆரை குடும்பக் கட்சியான தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா இழிவுப்படுத்தி பேசியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு பேசியுள்ளது தி.மு.க.வுக்கும், ஆ.ராசாவுக்கும் தான் இழுக்கே தவிர எம்ஜிஆருக்கு அல்ல.

இருப்பினும், இனி வருங்காலங்களில் நாவடக்கத்துடன் பேச ஆ.ராசா கற்றுக் கொள்ள வேண்டும். நாவடக்கம் இல்லாமல் பேசும் ஆ.ராசாவுக்கு, ‘நாவை அடக்காவிட்டால் சொற்குற்றம் ஏற்பட்டு துன்பப்பட நேரிடும்’ என்ற வள்ளுவரின் வாக்கினை சுட்டிக் காட்டுவதோடு, வருகின்ற தேர்தலில் இதற்கான விளைவுகளை தி.மு.க.வும், ஆ.ராசாவும் சந்திக்க நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x