

மதுரை: மதுரையைச் சேர்ந்த நியோமேக்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோரிடம் ரூ.5,000 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக, மதுரை, திருச்சி மாவட்டங்களில் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.
இந்த வழக்கில் நியோமேக்ஸ் இயக்குநர்கள் கமலக்கண்ணன், வீரசக்தி, பாலகிருஷ்ணன், கபில்ஆகியோர் கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கமலக்கண்ணன், கபில் ஆகியோருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி, ரவிசங்கர், ராஜ்குமார் ஆகியோர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
ரூ.78 கோடி சொத்துகள்: இந்த மனுக்கள் நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் நம்பிசெல்வன் வாதிடும்போது, "நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு மதுரை,சிவகங்கை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 51 லட்சம் சதுர அடி நிலம் உள்ளது. இதுதவிர, ரூ.78 கோடி மதிப்பிலான வேறு சொத்துகளும் கண்டறியப்பட்டுள்ளன. இந்தசொத்துகளை முடக்கி, அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
இதையடுத்து நீதிபதி தண்டபாணி, நியோ மேக்ஸ்நிறுவனத்தின் சொத்துகளை முடக்கி, அரசிதழில் வெளியிட எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.