Published : 01 Feb 2024 06:57 AM
Last Updated : 01 Feb 2024 06:57 AM
உதகை/அரியலூர்: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில்உள்ள லாங்வுட் சோலை மற்றும்அரியலூர் மாவட்டம் கரைவெட்டிபறவைகள் சரணாலயத்துக்கு ராம்சர் அங்கீகாரம் அறிவிக்கப்பட்டுள்ளதை, இயற்கை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
1971-ல் ஈரான் நாட்டில் உள்ள ராம்சர் நகரில் சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை கையெழுத்தானது. இந்த உடன்படிக்கையின்படி, உலகெங்கும் உள்ள சதுப்பு நிலங்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து ராம்சர் தலங்கள் என அடையாளப்படுத்தி, சர்வதேச முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் 75 ராம்சர் தலங்கள் உள்ளன. இவற்றில் தமிழகத்தில் 14 தலங்கள் உள்ளன. இந்நிலையில், மேலும் 7 சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் பெற தமிழ்நாடு ஈரநில ஆணையம் திட்டமிட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள லாங்வுட் சோலைக்கு ராம்சர் அங்கீகாரம் பெறுவதற்கான பணிகளை வனத்துறை மேற்கொண்டது. இதையொட்டி, லாங்வுட் சோலைக்கு ராம்சர் அங்கீகாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் சிறந்த பசுமை மாறாக் காடுகளில் ஒன்றான லாங்வுட் சோலைக்கு ராம்சர் அங்கீகாரம் அறிவிக்கப்பட்டிருப்பது, இயற்கை ஆர்வலர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து லாங்வுட் சோலை பாதுகாப்புக் குழு செயலர் கே.ஜே.ராஜு கூறும்போது, "லாங்வுட் சோலை கண்காணிப்புக் குழு கடந்த 25 ஆண்டுகளாக வனத் துறையுடன் இணைந்துவனத்தைப் பாதுகாத்து வருகிறது.
மேலும், ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இயற்கை முகாம்களை நடத்தி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி, லாங்வுட் சோலையை சுற்றுச் சூழல் கல்வி மையமாக மாற்றியுள்ளது. இந்த உலக அளவிலான அங்கீகாரம், பாதுகாப்புக் குழுவினரின் அர்ப்பணிப்புக்கும், தியாகத்துக்கும் கிடைத்த பரிசாகும்" என்றார்.
கோத்தகிரி நகரின் மையப் பகுதியில் 250 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள லாங்வுட் சோலைக்கு, 2022-ல் இங்கிலாந்து அரசியின் பசுமை நிழற்குடை (குயின்ஸ் கனோபி) விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பறவைகள் சரணாலயம்: அரியலூர் மாவட்டம் கரைவெட்டி கிராமத்தில் காவிரி ஆற்றின்கிளை வாய்க்காலான புள்ளம்பாடி வாய்க்காலின் வழித்தடத்தில், 453.71 ஹெக்டேர் பரப்பிலான ஏரி அமைந்துள்ளது.
இந்த ஏரிக்கு நவம்பர் முதல்பிப்ரவரி வரை ரஷ்யா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, மங்கோலியா, கஜகஸ்தான், நைஜீரியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கூழக்கிடா, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிரும் அரிவாள் மூக்கான், சாம்பல் நிற கொக்கு, வண்ணநாரை, நாமக்கோழி, நீர் காகம், வரித்தலை வாத்து, பெரிய நாரை, புள்ளிமூக்கு நாரை உள்ளிட்ட பல்வேறு வகையிலான பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்துதங்கி, இனப்பெருக்கம் செய்து திரும்புகின்றன.
இந்த ஏரியை 1999-ல் பறவைகள் சரணாலயமாக தமிழக அரசு அறிவித்தது. தொடர்ந்து, அங்கு படகு வசதி, பார்வையாளர் மாடம்உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.இந்நிலையில், இந்த பறவைகள் சரணாலயத்துக்கு ராம்சர் அங்கீகாரம் அளிக்கப்பட்டுஉள்ளது அரியலூர் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் த.இளங்கோவன் கூறும்போது, "கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு ராம்சர் அங்கீகாரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு, ராம்சர் தளம் மற்றும் தனியார் முகவர்கள் வாயிலாக கிடைக்கப்பெறும் நிதியுதவியைக் கொண்டு, கூடுதல் வசதிகள்ஏற்படுத்தப்படும். இதன் மூலம் கரைவெட்டி ஏரியில் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், அவற்றின் வாழ்வாதாரமும் உயரும். மேலும், சரணாலயம் சார்ந்த கிராம மக்களின் வாழ்வாதாரம் உயரவும் வாய்ப்புள்ளது" என்றார்.
முதல்வர் மகிழ்ச்சி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: லாங்வுட்சோலை மற்றும் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ராம்சர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். நமது திராவிட மாடல் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பின்னர் 2022-ம் ஆண்டில் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து 13 இடங்கள் ராம்சர் பட்டியலில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தியாவிலேயே அதிகமாக 16 ராம்சர் தலங்களைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நாம் தொடர்ந்து செலுத்தி வரும் அக்கறைக்கான சான்றாக இந்த சாதனை விளங்குகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT